ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் கஜேந்திரன்(27). இவர் ஆர்.கே.பேட்டை பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது தம்பி மோகன், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், ஆர்.கே.பேட்டை அண்ணாநகர் சேர்ந்த விஜயகுமார் மகள் மதுமிதா என்பவரும் காதலித்து வருகின்றனர். இதனால் விஜயகுமார் குடும்பத்தினருக்கும், கஜேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மதுமிதா, மோகனுக்கு போன் செய்து, என் அப்பா, என்னை கொடுமைப்படுத்துகிறார்.
ஆகையால், நான் உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டேன் என கூறினார். இந்நிலையில் மகளைத் தேடி கஜேந்திரன் வீட்டிற்கு வந்த விஜயகுமார், அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த விஜயகுமார், தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கஜேந்திரனின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த கஜேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விஜயகுமாரை கைது செய்தனர்.
The post காதல் தகராறில் தனியார் நிறுவன ஊழியரின் கழுத்தை அறுத்தவர் கைது appeared first on Dinakaran.