பல்லாவரம்: பல்லாவரம் அருகே நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2ரவுடிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 8 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் இரவு 2 ரவுடிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் வந்த மர்ம கும்பல் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொலையான இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்கள் சேகரித்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், தாம்பரம் அடுத்த முடிச்சூர், எம்ஜிஆர் நகர் முதல் தெருவை சேர்ந்த ஆறு (எ) ஆறுமுகம் (21), முடிச்சூர் லெட்சுமி நகர், காந்தி தெருவை சேர்ந்த சதீஷ் (22) என்பதும், 2 பேரும் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது.
இவர்களில், ஆறுமுகம் மீது ஏற்கனவே பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு பெரும்புதூர் அடுத்த எழுச்சூர் ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிய சம்பவத்தில் ஆறுமுகத்திற்கு தொடர்பு இருப்பதும், அத்துடன் சில நாட்களுக்கு முன்பு முடிச்சூரை சேர்ந்த பிரபல ரவுடி தீபக் (23) என்பவரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் ஆறுமுகத்தின் நண்பர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆறுமுகம் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபக் தலைமையிலான 8 பேர் கும்பல், அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்று, அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, கொலை சம்பவத்தை அரங்கேற்றி சென்றதும் தெரியவந்தது. மேலும், தப்பிச்சென்ற கொலையாளிகளை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் அடையாளம் காண்பதற்காக போலீசார் ஆய்வு செய்து பார்த்தபோது, ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து, கொலை சம்பவத்தை செய்ததும் தெரியவந்தது. மேலும், கொலைச் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு தங்களது திட்டம் நல்லபடியாக நிறைவேற வேண்டி, சாமி கும்பிட்டுச் சென்றதும் சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. கொலை சம்பவம் நடந்த இடத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
4 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீசார், தாம்பரம் பகுதியில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கொலை சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே 8 பேரை கைது செய்து, அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவிற்கு பிறகே கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். முக்கிய குற்றவாளியான தீபக்ைகபோலீசார் வலைவீசி தேடி வருகின் றனர். இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* புறநகரில் பதுங்கும் ரவுடிகள்
சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி வருவதால் அவர்கள் புறநகருக்கு சென்று பதுங்கி விட்டனர். குறிப்பாக பல்லாவரம், சேலையூர், பீர்க்கன்காரணை ஆகிய இடங்களில் ரவுடிகள் அதிக அளவில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு போலீஸ் ஆதரவுடன் அவர்கள் பதுங்கியிருந்து வியாபாரிகள், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக ரவுடிகளுக்கு ஆதரவான சில வக்கீல்கள், அடிக்கடி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஒரு உயர் அதிகாரியை சந்தித்து பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குள் ரவுடிகள் சமீப நாட்களாக தலை தூக்கத் தொடங்கியுள்ளனர். ரவுடிகள் மீது தாம்பரம் போலீசார் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
