5 ஆண்டுகளுக்கு பின் உத்திர காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு; 4 தரை பாலங்கள் மூழ்கியது: கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் நேரில் ஆய்வு

ஒடுகத்தூர், நவ.2: ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் 5 ஆண்டுகளுக்கு பிறகு உத்திர காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 4 தரை பாலங்கள் மூழ்கியுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும், மழையால் அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. அதேபோல், ஜவ்வாதுமலை தொடர்களில் பெய்து வரும் மழையால் ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு பகுதியில் உள்ள உத்திர காவிரி ஆற்றில் நேற்று அதிகாலை காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலரசம்பட்டு பகுதியில் உருவாகும் இந்த வெள்ளப்பெருக்கு ஒடுகத்தூர், குருவராஜபாளையம், அகரம், பள்ளிகுப்பம், கீழ்கிருஷ்ணாபுரம், வெட்டுவானம் வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கிறது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள், கொய்யா, நெல், வெண்டை போன்றவை தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஏரிகள், குளங்கள், கிணறுகள் என அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வேகமாக நிறம்பி வருகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மேலரசம்பட்டு- மடிகம், கத்தாரிகுப்பம்- காளியம்மன் பட்டி, வண்ணந்தாங்கல், ஒடுகத்தூர்- நேமந்தபுரம் செல்லும் 4 தரை பாலங்களும் வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் 4, 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; கடந்த 2019ம் ஆண்டு தொடர்ந்து பெய்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் பெரும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உத்திர காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதற்கு, அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
மேலும், வெள்ளப்பெருக்கின் நீரோட்டம் அதிகரித்து கொண்டே இருப்பதால் கரையோரம் வசித்து வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்புடன் இருக்கும்படி அந்தந்த ஊராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒடுகத்தூர் பேரூராட்சி சார்பில் ஒளிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டது.

இதற்கிடையே, மேலரசம்பட்டு பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநருமான விஜய கார்த்திகேயன், கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கரையோரம் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஆர்டிஓ பாலசுப்பிரமணியம், தாசில்தார் வடிவேல், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், நகர செயலாளர் பெருமாள்ராஜா, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன், செயல் அலுவலர் குமார், ஆர்ஐ சரவணன் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

‘வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம்’
மேலரசம்பட்டு பகுதியில் உருவாகும் உத்திர காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் யாரும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல், ஆற்றங்கரையோரம் நின்று செல்போனில் செல்பி எடுக்கவோ, புகைபடம் பிடிக்க எடுக்கவோ கூடாது. மேலும், குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும் என்று வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்
மாவட்டதில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாய நிலங்கள், ஏரி, குளம், குட்டை, கிணறுகள் வேகமாக நிறம்பி வருகிறது. இதனால், விவசாய நிலங்களில் வசித்து வருபவர்கள் தங்களது வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் உடனே மின்சார துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். நீங்களாகவே மின் கம்பங்களில் ஏறி சீரமைக்க முயற்சி செய்ய கூடாது. அதேபோல், கால்நடைகளை வைத்துள்ளவர்கள் தங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை மின் கம்பங்களில் கட்டி வைப்பதை முற்றிலும் தவிற்க வேண்டும் என்று மின்சார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

The post 5 ஆண்டுகளுக்கு பின் உத்திர காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு; 4 தரை பாலங்கள் மூழ்கியது: கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: