வேலூர், மார்ச் 9: வேலூர் சண்டே மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் வெயிலின் தாக்கத்தால் குறைந்ததால் ரூ.22 லட்சத்துக்கு மட்டுமே விற்பனை நடந்தது. வழக்கமான வியாபாரத்தை விட இந்த வாரம் மந்தகதியாக இருந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் சண்டே மார்க்கெட்டில் பழங்கால பொருட்கள் முதல் நவீன கால கம்ப்யூட்டர்கள் வரை விற்பனைக்காக கிடைக்கும். குறிப்பாக பழங்கால கலை பொருட்கள், டேப் ரிகார்டர்கள், சிடி பிளேயர்கள், ஸ்பீக்கர்கள், ரேடியோக்கள், டிவிக்கள், ஜிம்முக்கான சாதனங்கள், புத்தகங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கிறது. இத்தொழிலில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். சண்டே மார்க்கெட் கடைகளை பொறுத்தவரை லாங்கு பஜார், பழைய மீன் மார்க்கெட் சாலை தொடங்கி கமிசரி பஜார், பில்டர்பெட் ரோடு ஆசிரியர் இல்லம் வரை கடைகள் வைக்கப்படுகின்றன.
