வேலூர், மார்ச் 10: குடும்பத்தகராறில் சிக்கன் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ஆசின்பாஷா(26). இவர் தொரப்பாடியில் ஒரு சிக்கன் கடையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகிறது. திருமணம் நடந்தது முதல் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இரவும் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஆசின்பாஷா. அன்று இரவு வீட்டில் அனைவரும் உறங்க சென்ற நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
