இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து ரன் குவிப்பு

கிறிஸ்ட்சர்ச்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வீரர் கேன் வில்லியம்சன் 93 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை இழந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்றுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார். டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். டாம் லேதமும், கான்வேவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கான்வே 2 ரன்களில் ஆட்டமிழக்க, கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். வில்லியம்சன்-லேதம் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. லேதம் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரச்சின் ரவீந்திரா நிதானமாக ஆடினார். வில்லியம்சன் அதிடியாக ரன் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 34 ரன்களில் ஆட்டமிழக்க, கேன் வில்லியம்சனுடன் டேரல் மிட்சல் ஜோடி சேர்ந்தார். வில்லியம்சன் அரைசதம் கடந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். சிறப்பாக ஆடிய அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 93 ரன்களில் அட்கின்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 197 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 93 ரன்கள் சேர்த்தார். அவர் சதத்தை தவறவிட்டதால் பெவிலியனுக்கு சோகமாக நடந்து சென்றார். ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ரன்களை குவித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளரான சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், அட்கின்சன் மற்றும் பிரைடன் கர்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

The post இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: