அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது, விளையாட்டு உணர்வுக்கு எதிராக நடந்து கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில், அர்ஷ்தீப் சிங் தனது நிதானத்தை இழந்து செயல்பட்டது தற்போது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து இன்னிங்ஸின் 11-வது ஓவரின் போது அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல், அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களை விளாசினார். இதனால் ஆவேசமடைந்த அர்ஷ்தீப், அதே ஓவரின் ஐந்தாவது பந்தை மிட்செல் தடுத்து ஆடியபோது, பந்தை எடுத்து வேகமாக அவர் மீது வீசினார். எதிர்பாராத விதமாகப் பந்து மிட்செல் மீது பலமாகத் தாக்கியதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த டேரில் மிட்செல், அர்ஷ்தீப் சிங்கிடம் வாக்குவாதம் செய்ய முயன்றார். தொடக்கத்தில் அர்ஷ்தீப் மன்னிப்பு கேட்காமல் பந்து வீசச் சென்றதால் பதற்றம் அதிகரித்தது. உடனே தலையிட்ட இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், மிட்செலைச் சமாதானப்படுத்தினார். பின்னர் நடுவர்கள் அர்ஷ்தீப்பை அழைத்து எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் தனது தவறை உணர்ந்து மிட்செலிடம் மன்னிப்பு கோரினார்.
இருப்பினும், ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக அர்ஷ்தீப் சிங்கிற்குப் போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது கணக்கில் ஒரு டிமெரிட் (Demerit Point) புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
