மும்பை: டி.20 உலகக்கோப்பை முடிந்த நிலையில், ஐசிசி வெளியிட்ட சிறந்த டி.20 அணியில் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், பும்ரா ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 10வது ஐசிசி டி.20 உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. இப்போட்டி முடிந்தநிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த டி.20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயான் பிஷப், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன், வர்ணனையாளர் நடாலி ஜெர்மானோஸ், ஐசிசி பிரதிநிதி கவுரவ் சாக்சேனா, இலங்கை செய்தியாளர் ரெக்ஸ் கிளமென்டைன் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு இந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளது.
அணி விவரம்: சாகிப்சாதா ஃபர்ஹான், சஞ்சு சாம்சன் (வி.கீ), இஷான் கிஷன், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், வில் ஜாக்ஸ், அடில் ரசீத், ஜஸ்பிரித் பும்ரா, லுங்கி இங்கிடி, பிளெசிங் முசரபானி, 12வது வீரர் ஷாட்லி வான்ஷால்க்விக். தொடக்க வீரராக உலகக்கோப்பை தொடர் நாயகனான இந்தியாவின் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாம்சன் 5 போட்டிகளில் 321 ரன்கள் எடுத்திருந்தார். அரை இறுதி, இறுதி போட்டிகளில் தலா 89 ரன்கள் என நாக்அவுட் போட்டிகளில் இந்தியா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
மற்றொரு தொடக்க வீரராக பாகிஸ்தானின் சாகிப்சாதா ஃபர்ஹான் உள்ளார். 3வது இடத்தில், 9 போட்டிகளில் 317 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு அதிரடி தொடக்கத்தை தந்த இஷான் கிஷன் உள்ளார். 4வது இடத்திற்கு 3 அரைசதம் உட்பட 286 ரன்கள் எடுத்து, தென்ஆப்பிரிக்க அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் எய்டன் மார்க்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5வது இடத்தில் 9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 217 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உள்ளார். 6வது இடத்தை இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸும், 7வது இடத்தை வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரும் பிடித்துள்ளனர். 8வது இடத்திற்கு 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும், பைனலில் கட்டுக்கோப்பாக பந்துவீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இந்திய நட்சத்திர பவுலர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
9வது இடத்தை 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் லுங்கி இங்கிடியும், 10வது வீரராக 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை சாய்த்த இங்கிலாந்தின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித்தும், 11வது இடத்திற்கு 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வே அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய பிளெசிங் முசரபானியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணியின் 12வது வீரராக 4 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா 4விக்கெட்டுகள் வீழ்த்திய அமெரிக்காவின் ஷாட்லி வான்ஷால்க்விக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
