ஜிம்பாப்வே மகளிருடன் 3ம் ஓடிஐ: ஈசியா வென்ற நியூசி வாஷ்அவுட் செய்து அசத்தல்

டுனெடின்: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து மகளிர் அணி அட்டகாச வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி உள்ளது. ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வந்தது. ஏற்கனவே முடிந்த 2 ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து மகளிர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி டுனெடின் நகரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் துவக்க வீராங்கனைகளாக கேப்டன் அமெலியா கெர், எம்மா மெக்லியோட் களமிறங்கினர்.

எம்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், அமெலியா சிறப்பாக ஆடி 106 பந்துகளில் 80 ரன் விளாசி அவுட்டானார். பின் வந்த வீராங்கனைகளில் மேடி கிரீன் 73 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 94 ரன், புரூக் ஹேலிடே 40 பந்துகளில் 40 ரன் குவித்தனர். 50 ஓவரில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் மட்டுமே இழந்து 303 ரன் விளாசியது. அதையடுத்து, 304 ரன் இலக்குடன் ஜிம்பாப்வே மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகள் மாடஸ்டர் முபாசிக்வா 5, சிபோ முகெரி டிரிபனோ 22 ரன் எடுத்து மோசமான துவக்கத்தை தந்தனர். அடுத்து வந்த வீராங்கனைகளில் லொரீன் சுமா 34 ரன் எடுத்தார்.

அவரை தவிர வேறு யாரும் சோபிக்காததால், 27.1 ஓவரில் ஜிம்பாப்வே மகளிர் 103 ரன்னுக்கு சுருண்டனர். அதனால், 200 ரன் வித்தியாசத்தில் நியூசி மகளிர் இமாலய வெற்றியை பதிவு செய்தனர். நியூசி தரப்பில் அமெலியா கெர் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியை அடுத்து, 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து மகளிர் தொடரை கைப்பற்றி, ஜிம்பாப்வே அணியை வாஷ்அவுட் செய்தனர். இப்போட்டியின் ஆட்ட நாயகியாகவும், தொடர் நாயகியாகவு்ம நியூசி கேப்டன் அமெலியா கெர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: