இயற்கை விவசாயம் 1 கோடி விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.2,481 கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டத்துக்காக ரூ. 2,481 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகளுக்கு இந்த திட்டம் உதவும். தற்போது, ​​நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஹெக்டேர் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது.

அருணாச்சலில் ரூ.3,689 கோடியில் 2 நீர்மின் திட்டங்கள்: அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.3,689 கோடி முதலீட்டில் இரண்டு நீர் மின் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அடல் கண்டுபிடிப்பு இயக்கத்துக்கு ரூ.2,750 கோடி: நிதி ஆயோக்கின் முதன்மை முயற்சியான அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்திற்கு 2028 மார்ச் 31ம் தேதி வரை நிதிச்செலவாக ரூ.2,750 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

‘ஒரே நாடு ஒரு சந்தா’ திட்டத்திற்கு ரூ.6000 கோடி: நாடு முழுவதும் அறிவார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பத்திரிக்கை வெளியீடுகளுக்கான அணுகலை வழங்குவதற்கான புதிய திட்டமான ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் சுமார் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 6,300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியது. ஏறக்குறைய 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களாக இடம் பெறுவார்கள். உயர்கல்வித் துறையானது இதற்கான ஒருங்கிணைந்த போர்ட்டலைக் கொண்டிருக்கும்.

நிரந்தர கணக்கு எண் 2.0 திட்டத்திற்கு ரூ.1,435 கோடி: அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண்ணை பொது வணிக அடையாளங்காட்டியாக மாற்ற வசதியாக ரூ.1,435 கோடி நிதி ஒதுக்கி நிரந்தர கணக்கு எண் 2.0 திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் ​​சுமார் 78 கோடி பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 98 சதவீதம் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இயற்கை விவசாயம் 1 கோடி விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.2,481 கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: