ஜார்க்கண்டில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்களில் 89% பேர் கோடீஸ்வரர்கள்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேபிபி), காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, மொத்தம் 81 எம்எல்ஏக்களில் 71 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார். இது கடந்த 2019 தேர்தலில் வெற்றி பெற்ற கோடீஸ்வர எம்எல்ஏக்களை விட 20 சதவீதம் அதிகம். அப்போது 56 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2014ல் 41 பேர் கோடீஸ்வர எம்எல்ஏக்களாக இருந்தனர்.

இம்முறை வெற்றி பெற்ற 71 கோடீஸ்வர எம்எல்ஏக்களில் 28 பேர் ஜேஎம்எம், 20 பேர் பாஜ, 14 பேர் காங்கிரஸ், 4 பேர் ஆர்ஜேடி, 2 பேர் சிபிஐஎம்எல் மற்றும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஐக்கிய ஜனதா தளம், ஏஜேஎஸ்யு கட்சிகளில் தலா ஒருவர் ஆவார். ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 4, சிபிஐஎம்எல் 2 இடங்களில் வென்றுள்ளன. பாஜ 21, லோக் ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளம், ஏஜேஎஸ்யு கட்சி தலா 1 இடங்களில் வென்றுள்ளன. 71 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.90 கோடி.

இதில் காங்கிரசின் லோகர்தாகா தொகுதி எம்எல்ஏ ராமேஸ்வர் ஒராயன் அதிகபட்சமாக ரூ.42.20 கோடி சொத்துக்களை வைத்துள்ளார். ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் ஜெய்ராம் குமார் மஹதோ ரூ.2.55 லட்சம் சொத்துக்களுடன் குறைந்த சொத்துக்கள் கொண்ட எம்எல்ஏவாக உள்ளார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 42 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டில் ரூ.2.71 கோடி அதிகரித்துள்ளது. 14 எம்எல்ஏக்கள் தங்களுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் இருப்பதாக கூறி உள்ளனர்.

The post ஜார்க்கண்டில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்களில் 89% பேர் கோடீஸ்வரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: