அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு முதல் நாளிலே முடங்கியது நாடாளுமன்றம்: இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் முடங்கின. இன்று அரசியலமைப்பு 75ம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடும். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடக்க உள்ள இக்கூட்டத்தொடரில் பங்கேற்கும் முன்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், நாசிர் ஹூசேன், மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை பெற அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும், இதில் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென நாடாளுமன்றத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. மேலும், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல எம்பிக்கள் இரு அவையிலும் ஒத்திவைப்பு தீர்மானமும் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், மக்களவை காலையில் கூடியதும், மறைந்த எம்பிக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உடனடியாக, அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டுமெனவும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். மேலும், உபியின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வுக்கு அதிகாரிகள் சென்றதால் ஏற்பட்ட எதிர்ப்பில் 4 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவைத்தலைவராக இருந்த பாஜ எம்பி சந்தியா ராய் ஏற்க மறுத்தார். இதனால் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பம் காரணமாக, பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் அமளி தொடர்ந்தது. இதனால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மாநிலங்களவை காலையில் கூடியதும், அதானி விவகாரத்தில் வழங்கப்பட்ட 7 ஒத்திவைப்பு தீர்மானங்கள் உட்பட 13 தீர்மானங்களை நிராகரிப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

ஆனாலும், ‘இது தேச நலன் சார்ந்த விவகாரம் என்பதால் கட்டாயம் விவாதம் நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என அவையின் எதிர்க்கட்சி தலைவரான கார்கே வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த அவைத்தலைவர் தன்கர் 11.45 மணி வரை அவையை ஒத்திவைத்தார். அதன் பிறகு அவை கூடிய போதும், அமளி அடங்காததால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலே அதானி விவகாரம் இரு அவைகளிலும் புயலை கிளப்பி உள்ளது. இன்று அரசியலமைப்பு தினத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டம் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடக்க உள்ளது. இவ்விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமை தாங்குகிறார். அரசியலமைப்பு தின விழா கொண்டாட்டம் காரணமாக இரு அவைகளும் இன்று நடக்காது என்பதால், மீண்டும் நாடாளுமன்றம் நாளை கூடும்.

* வக்பு வாரிய கூட்டுக்குழு காலவரையறையை நீட்டிக்க மனு
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு நடத்தி முடித்துள்ளது. இதன் அறிக்கை வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால், கூட்டுக்குழு ஆய்வில் உறுப்பினர்களின் கருத்துக்கள் முறையாக கேட்கப்படவில்லை, குழு தலைவரான பாஜ எம்பி ஜகதாம்பிகா பால் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால், வக்பு வாரிய கூட்டுக்குழுவின் காலவரையறையை நீட்டிக்கக் கோரி, கூட்டுக்குழு உறுப்பினர்களான திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, எம். அப்துல்லா, காங்கிரஸ் எம்பிக்கள் சயீத் நசீர் ஹுசேன், முகமது ஜாவேத், இம்ரான் மசூத், திரிணாமுல் காங்கிரசின் கல்யாண் பானர்ஜி, நதிமுல் ஹக் உள்ளிட்டோர் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

* எதிர்க்கட்சி தலைவர்கள் பேச அனுமதி வேண்டும்
அரசியலமைப்பு தினத்தின் 75ம் ஆண்டு விழாவில் எதிர்க்கட்சி தலைவர்களும் பேச அனுமதிக்க வேண்டுமென இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் நேற்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக, கூட்டணி கட்சி எம்பிக்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, சுப்ரியா சுலே, ராகவ் சதா, சந்தோஷ் குமார், முகமது பஷீர், ராதாகிருஷ்ணன், ராம்ஜி லால் சுமன்,

பிரேமசந்திரன் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், ‘‘பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடக்க உள்ள அரசியலமைப்பு தினத்தின் 75ம் ஆண்டு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உரையாற்ற இருப்பதை அறிவோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் எதிர்க்கட்சி தலை வர்களையும் உரையாற்ற அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

* டிஜிட்டல் பேனா மூலம் வருகை பதிவு
காகிதத்திற்கு விடை கொடுத்து டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒருகட்டமாக மக்களவை அரங்கத்தில் நேற்று எம்பிக்கள் தங்கள் வருகைப் பதிவில் கையெழுத்திட பேட் மற்றும் டிஜிட்டல் பேனா வைக்கப்பட்டிருந்தது. இதோடு, வருகைப்பதிவேடு புத்தகமும் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன் மொபைல் ஆப் மூலம் எம்பிக்கள் வருகையை பதிவு செய்து வந்தனர்.

* சபாநாயகர் வலியுறுத்தல்
அவை அலுவல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, ‘‘எம்பிக்கள் தங்கள் கருத்துக்களை ஆக்கப்பூர்வமான முறையில் தெரிவிக்க வேண்டும். போராட்டம் என்ற பெயரில் அவையில் கூச்சலிடக் கூடாது. அனைவரும் அவையின் உரையாடல், விவாதத்தின் உயர்ந்த பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதன் 75ம் ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில் எம்பிக்கள் அர்த்தமுள்ள விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறேன்’’ என்றார்.

* விவாதம் நடத்த அரசு பயப்படுகிறது: காங்.
இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘‘அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அரசு பயப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த விஷயத்திலும் ஒரு வார்த்தையை கூட கேட்க அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தால், அடுத்த நிமிடமே அவர்கள் நாள் முழுவதும் அவையை ஒத்திவைக்கின்றனர். ஏனெனில் பிரச்னையை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சுகின்றனர். அதானி விவகாரத்தில் அரசு குறைந்தபட்சம் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

The post அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு முதல் நாளிலே முடங்கியது நாடாளுமன்றம்: இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அமளி appeared first on Dinakaran.

Related Stories: