உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் ஹரிஹர் என்ற இந்து கோயில் இருந்ததாகவும், முகலாய பேரரசர் பாபரால் 1529ல் அந்த கோயில் இடிக்கப்பட்டதாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு சென்றனர். அங்கு கூடியிருந்த மக்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், மசூதிக்குள் போலீசார் நுழைவதை அந்த கும்பல் தடுக்க முயன்றது. அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அந்த கும்பல் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது.
இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். துணை கலெக்டர் காலில் குண்டு பாய்ந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஜமா மசூதி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இணைய வசதி முடக்கப்பட்டது. வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கலவரம் தொடர்பாக போலீசார் 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். நாகாசா காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், சம்பல் கோட்வாலியில் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சமாஜ்வாடி கட்சி எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க் மற்றும் சம்பல் தொகுதி சமாஜ்வாடி எம்எல்ஏ இக்பால் மெகமூத் மகன் சோகைல் இக்பால் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 2 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். 2750 பேர் அடையாளம் தெரியாதவர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை எஸ்பி கிருஷன் குமார் தெரிவித்தார்.
ராகுல்காந்தி: சம்பல் கலவரத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் தலையிட வேண்டும். உபி அரசின் ஒருசார்பான, அவசரமான அணுகுமுறை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு நலனையோ அல்லது மாநிலத்தின் நலனையோ பொருட்படுத்தாமல் இந்து-முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே பிளவு மற்றும் பாகுபாட்டை உருவாக்க பா.ஜ அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் தலையிட்டு நீதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பிரியங்கா காந்தி: சம்பல் வன்முறையில் உபி அரசு அவசரமாகச் செயல்பட்டது அங்குள்ள சூழலை கெடுத்துவிட்டதையே காட்டுகிறது. அதிகாரத்தில் அமர்ந்து பாகுபாடு, ஒடுக்குமுறை, பிரிவினையை பரப்ப முயற்சிப்பது மக்களின் நலனுக்கோ அல்லது நாட்டின் நலனுக்கோ உகந்தது அல்ல. உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை உணர்ந்து நீதியை வழங்க வேண்டும். அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதி காக்க வேண்டும் என்பதே உத்தரபிரதேச மக்களுக்கு எனது வேண்டுகோள்.
* சமாஜ்வாடி எம்பி பெயர் சேர்த்தது எப்படி?
சம்பல் கலவரம் நடந்த போது சமாஜ்வாடி எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க் அங்கு இல்லை. அவர் பெங்களூருவில் இருந்தார். அப்படி இருக்கும் போது அவர் பெயரை எப்ஐஆரில் போலீசார் சேர்த்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. அதற்கு எஸ்பி கிருஷன்குமார் கூறுகையில்,’ கலவரம் தொடர்பாக அல்ல. அவர் ஏற்கனவே கொடுத்த அறிக்கைகள் அடிப்படையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மசூதியை கல் வீசி சேதப்படுத்த முயன்றவர்களும் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* இடைத்தேர்தல் முறைகேடுகளை மறைக்க கலவரம் – அகிலேஷ்
உபி இடைத்தேர்தலில் 9 தொகுதியில் நடந்த முறைகேடுகளை மறைக்க சம்பல் பகுதியில் கலவரம் நடத்தப்பட்டது. சபர்மதி ரிப்போர்ட் படத்தை பார்த்த பிறகு சில பா.ஜ தலைவர்கள் இதை செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த கலவரத்திற்கு காரணமான காவல்துறை மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை சஸ்பெண்ட் செய்து கொலை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.
* நவ.30 வரை தடை நீடிப்பு மாஜிஸ்திரேட் விசாரணை
சம்பல் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் நவ.30 வரை வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ராஜேந்தர் பென்சியா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதிகாரிகள் அனுமதியில்லாமல் வெளியாட்களோ, பிற சமூக அமைப்புகளோ, பொதுமக்கள் பிரதிநிதிகளோ மாவட்ட எல்லைக்குள் நுழையக்கூடாது என்று அவர் உத்தவிட்டுள்ளார். கலவரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
* பாபர் கட்டிய மசூதி… விஷ்ணுவின் 10வது அவதாரம்: சம்பல் பற்றி எரிவது ஏன்?
முகலாய முதல் பேரரசர் பாபர் ஆட்சி காலத்தில் 1526 முதல் 1530க்குள் கட்டப்பட்ட மூன்று பெரிய மசூதிகளில் ஒன்று சம்பல் மசூதி. மற்ற 2 மசூதிகள் பானிபட்டில் உள்ளன. அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு, வாரணாசி ஞானவாபி மசூதி, இப்போது சம்பலில் உள்ள 16ம் நூற்றாண்டு மசூதிக்கும் சிக்கல் வந்துள்ளது. பாபரின் நம்பகமான லெப்டினன்ட்களில் ஒருவரான இந்து பெக் குசின் என்பவரால் 1526 டிசம்பரில் கட்டப்பட்டது. மசூதியில் உள்ள பாரசீக கல்வெட்டுகள் முகலாய தோற்றத்தை உறுதிப்படுத்துகின்றன.
இருப்பினும் சில வரலாற்றாசிரியர்கள் ஏற்கனவே இருக்கும் இந்து கோவில்களின் எச்சங்கள் அதன் கட்டுமானத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் ‘பாபர்நாமா’ மற்றும் ‘ஐன்-இ-அக்பரி’ போன்ற வரலாற்று நூல்கள் அடிப்படையில் பாபர் காலத்தில் இந்து கோயில்கள் அழித்ததை ஆவணப்படுத்துகின்றன என்று கூறுகிறார்கள். உலகின் தொடக்கத்தில் இந்து புராணம் உருவான விஸ்வகர்மாவால், சம்பல் நகரில் கோயில் கட்டப்பட்டது. ஆனால் பாபரின் படைகள் கோவிலை சிறிதளவு அழித்து மசூதியாக மாற்றியதாக இந்துக்கள் கூறுகிறார்கள்.
மேலும் விஷ்ணுவின் பத்தாவது மற்றும் இறுதி அவதாரமான கல்கியின் பிறப்பிடமாகக் கூறப்படும் சம்பல் இந்துக்களுக்கு மத ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து சாஸ்திரங்களின்படி, கலியுகத்தை (இருண்ட காலம்) முடிவுக்குக் கொண்டுவர கல்கி, சம்பலில் தோன்றினார் என்று நம்புகிறார்கள். மொத்தத்தில் நீதிமன்ற உத்தரவால் பிரச்னை உருவாகி உள்ளது. எனவே இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு அனுமதிப்பது 1991 வழிபாட்டு இடங்கள் சட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
* தர்கா நிலப்பிரச்னை எட்டாவில் வன்முறை
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவில் உள்ள ஜலேசர் நகரில் ஒரு தர்காவிற்கு அருகில் இருக்கும் தனியார் நிலத்தில் நடந்த கட்டுமானப் பணியை ஒரு குழுவினர் எதிர்த்ததால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பலருக்கு காயம் ஏற்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 சந்தேக நபர்கள் உள்பட சுமார் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிலத்தை வக்பு நிலம் என கூறி கட்டுமானப்பணியை நிறுத்தியதுடன், சுவரை இடித்து தள்ளிவிட்டு, 12க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தி, கல் வீச்சில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது. அங்கு எட்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) ஷியாம் நாராயண் சிங் உள்பட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
The post பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு சம்பல் கலவரத்தால் பதற்றம் நீடிப்பு: சமாஜ்வாடி எம்பி, எம்எல்ஏ மகன் மீது வழக்கு; 25 பேர் கைது; 2,750 பேரை தேடுகிறார்கள் appeared first on Dinakaran.