மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி

இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் உட்பட 6 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. இனக்கலவரம் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆயுதப் படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரணி நடத்தப்பட்டது. கொங்பா பஜாரில் இருந்து இந்த பேரணி தொடங்கியது.

ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். 3 கி.மீ. தூரத்துக்கு பேரணி நடத்தப்பட்ட நிலையில் முதல்வரின் தலைமை செயலகத்துக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது பேரணி பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு பொதுக்கூட்டம் நடத்தியவர்கள் பின்னர் மீண்டும் கொங்பா திரும்பினார்கள். இதற்கிடையே, மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரிடம் இருந்தும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜினாமா: இதற்கிடையே மணிப்பூரில் நவ.11ல் கடத்தப்பட்ட 6 பேர் பலியானதற்கு பொறுப்பேற்று ஜிரிபாம் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாபாம் இப்டோமி சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

The post மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: