மகளிர் உதவித்தொகை திட்டத்தால் ஆட்சியை தக்க வைத்ததா பாஜ கூட்டணி? வெற்றிக்கான காரணங்களை பட்டியலிடும் அரசியல் நிபுணர்கள்

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்து 5 மாதங்களுக்கு பிறகு, மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது. மகாயுதி கூட்டணிக்குள் பல மோதல்கள் வெடித்த போதிலும், அக்கூட்டணி 230க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மகாயுதியின் இந்த அபார வெற்றிக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் என அரசியல் நிபுணர்கள் வெளியிட்ட பட்டியல்:

முதலாவது, லட்கி பகின் திட்டம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மகாயுதி அரசு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் லட்கி பகின் திட்டத்தை அமல்படுத்தியது. மாநிலம் முழுவதும் 2.36 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற்றனர். இந்த திட்டம் தேர்தலில் கேம் சேஞ்சராக அமைந்ததாக கூறப்படுகிறது. வெறும் வாக்குறுதியோடு நிறுத்திக் கொள்ளாமல், திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்தது மகாயுதி அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திலும் லட்லி பக்னா என்ற உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தி வெற்றி பெற்ற பாஜ, இங்கும் அதே திட்டத்தை செயல்படுத்தி வெற்றியை தன்வசப்படுத்தி உள்ளது. அடுத்ததாக ஆர்எஸ்எஸ்சின் பிரசாரம். மகாராஷ்டிராவில் தேர்தலை முன்னிட்டு பாஜவின் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பு மாநிலம் முழுவதும் பிரசாரத்தை மேற்கொண்டது. ‘சஜாக் ரோஹோ’ (எச்சரிக்கையாக இருங்கள்) என்ற பெயரில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அவர்கள் மேற்கொண்ட பிரசாரம் மாநிலம் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.

அதே வேளையில், பாஜ தலைவர்களின் ஒற்றுமையாக இல்லாவிட்டால் அழிந்து விடுவோம் என்ற முழக்கமும் மாநில அளவில் மக்களை அணி திரட்டச் செய்தது. ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம், பிரிந்திருந்தால் அழிந்துவிடுவோம் என பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் பிரசாரம் செய்தனர்.

இது இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சி எனவும், பிரதமர் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவது எந்த வகையில் சரி என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிரன். இந்த தேர்தலில் பாஜ போட்டியிட்ட 84 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜவின் வெற்றியிலும் அதன் ஸ்டிரைக் ரேட்டை அதிகரிப்பதிலும் துணை முதல்வர் பட்நவிஸ் ஆற்றிய பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பாஜ அரசு சதி செய்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.

மகாவிகாஸ் அகாடிக்கு பாதகங்கள்
* லட்கி பகின் திட்டத்தை துவக்கத்தில் இருந்தே விமர்சித்து விட்டு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை தருவதாக மகாவிகாஸ் கூட்டணி கடைசி நேரத்தில் தான் அறிவித்தது. ஆனால், மகாவிகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகை திட்டம் நிறுத்தப்பட்டு விடும் என்ற ஆளும் கூட்டணியின் பிரசாரத்துக்கு உரிய பதிலடி தரவில்லை.

* மக்களவை தேர்தலில் முன்வைத்த பிரச்னைகளையே மாநில தேர்தலிலும் முன்வைத்தது.

* மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிக்கு உதவிய அளவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் எடுபடவில்லை.

* கட்சியில் பிளவுபடுத்தி விட்டார்கள் என்ற உத்தவ், சரத்பவார் அணிகளின் பிரசாரம் அனுதாபத்தை பெற்றுத்தரவில்லை.

* சோயாபீன், பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், அரசின் இலவச மின்சார சலுகைக்கு முன்பு அது எடுபடவில்லை.

* பிளவுபட்ட கட்சிகளின் நேரடி மோதல்
தேசியவாத காங்கிரஸ்: கட்சி பிளவுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரும், சின்னமும் அஜித்பவாருக்கு சொந்தமானது. இதனால் சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் என்ற புதிய கட்சி பெயரில் வேட்பாளர்களை நிறுத்தினார். 2 கட்சிகக்கும் இடையே நடந்த நேரடி மோதலில் 29 இடங்களில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வெற்றிபெற்றது. 6 தொகுதிகளில் சரத்பவார் கட்சி வென்றது.

சிவசேனா: சிவசேனா கட்சியை ஷிண்டேவிடம் பறிகொடுத்த உத்தவ் தாக்கரே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற கட்சி பெயரில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தார். இந்த 2 கட்சிகளும் நேரடியாக மோதிய 50 தொகுதிகளில் ஷிண்டே கட்சி 36 இடங்களிலும், உத்தவ் கட்சி 14 தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மகாயுதி கூட்டணிக்கு சாதகங்கள்
* லட்கி பகின் திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கியது மகாயுதி அரசு. நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடப்பதால், அந்த மாதம் வரையிலான உதவித்தொகையை முன்கூட்டியே வழங்குவதாக. அக்டோபர் மாதமே முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டார். தேர்தல் வாக்குப்பதிவுக்கு மறுநாள் டிசம்பர் மாத தவணை வழங்குவதாக உறுதியளித்தார். இதனால் 2019 சட்டப்பேரவை தேர்தலை விட பெண்கள் வாக்குகள் 6% கூடுதலாக பதிவாகின. இது ஆளும் கூட்டணி வெற்றிக்கு உதவியதாக கருதப்படுகிறது.

* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இளைஞர்களுக்கு பயிற்சிப்பணி மற்றும் பல்வேறு தரப்பினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

* ஓபிசியில் உள் ஒதுக்கீடு கோரி போராடிய மராத்தாக்களுக்கு எதிரான அரசின் நிலைப்பாடு, மற்ற ஓபிசி வாக்குகளை ஆளும் கூட்டணிக்கு சாதகமாக ஒருங்கிணைத்தது.

* ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்று பிரதமர் உள்ளிட்ட பாஜ தலைவர்களின் பிரசார கோஷம், மத ரீதியாக வாக்குகளை ஒன்றிணைக்க உதவியதாக சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

* உத்தவ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி அரசு நல்ல திட்டங்களை முடக்கி விட்டதாகவும், மகாயுதி அரசு மாநில வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே மக்கள் மத்தியில் ஆளும் அரசு கொண்டு சேர்த்து விட்டது.

* குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா படோலே 208 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். படோலே சகோலி தொகுதியில் போட்டியிட்டார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதிய ஜனதா வேட்பாளர் அவினாஷ் பிரமங்கரை விட வெறும் 208 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இதர வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு: மத்திய மாலேகாவ் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ முப்தி முகம்மது இஸ்மாயில் அப்துல் காலிக், ஆசீர் ஷேக் ரஷீத் என்பவரை 162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பேலாப்பூரில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மண்டா மாத்ரே 377 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். புல்தானாவில் சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட் 841 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

The post மகளிர் உதவித்தொகை திட்டத்தால் ஆட்சியை தக்க வைத்ததா பாஜ கூட்டணி? வெற்றிக்கான காரணங்களை பட்டியலிடும் அரசியல் நிபுணர்கள் appeared first on Dinakaran.

Related Stories: