அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உபகரணம் மூலம் சிசுவுக்கு மரபணு ரீதியான பாதிப்பு உள்ளதா என்பதை அறியும் ‘டபுள் மார்க்கர்’ மற்றும் ‘என்டி’ ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சிசுவின் முதுகெலும்பு, மூக்கு, கழுத்து பகுதி மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி குறித்தும் கண்டறிய முடிகிறது. குறிப்பாக 11 முதல் 14 வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் ஆரம்பநிலை சிசு வளர்ச்சிப் பரிசோதனைகள் இத்திட்டத்தில் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. அனலைசர் கருவியில் உள்ள அதிநவீன மென்பொருள் கட்டமைப்பு மூலம், சிசுவுக்கு மரபணு ரீதியாக ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை துல்லியமாக அறிய முடியும். தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை செலவாகும். அதுமட்டுமின்றி பல தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதி இல்லை. ஆனால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.1000க்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் இந்த பரிசோதனை மேற்கொள்ளவது குழந்தைக்கு நல்லது என ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர்.ஆனந்தகுமார் தெரிவிக்கிறார்.
இதுதொடர்பாக டாக்டர் ஆனந்தகுமார் கூறியதாவது: தமிழக அரசின் ஒரு முக்கிய திட்டமாக இது திகழ்கிறது. இந்த சிசு பரிசோதனை தமிழகத்தில் வேறு எந்த அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் இல்லாதது. தனியார் மருத்துவமனைகளில் அதிக பிரச்னையுள்ள (Highrisk) தாய்மார்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்வார்கள். அது மட்டும் இன்றி இந்த பரிசோதனைக்கான கட்டணம் அதிகம் என்பதால் கர்ப்பிணி தாய்மார்கள் இதை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ரூபாய் 1000 மட்டும் செலுத்தி இந்த பரிசோதனையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்யும் அனைத்து தாய்மார்களும் இந்த பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. அந்தந்த மருத்துவமனை மருத்துவர்கள் இதனை பரிந்துரை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 முதல் 20 கர்ப்பிணி தாய்மாருக்கு இந்த சேவை வழங்க முடியும், ஆனால் தற்போது வரை 4 முதல் 5 தாய்மார்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படுகிறது. தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரைக்கும் 760 கர்ப்பிணி தாய்மார்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள இந்த சிசு பரிசோதனை திட்டத்தை மக்கள் நன்றாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவைப்படும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள பிற மாவட்ட மருத்துவமனைகளிலும் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
The post கர்ப்பிணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள ஆரம்பநிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனை திட்டம்: சிசுவின் மரபணுவை ஆராய ‘டபுள் மார்க்கர்’ மற்றும் ‘என்டி’ ஸ்கேன் பரிசோதனை appeared first on Dinakaran.