ஐயப்பன் அறிவோம் 13 – இந்திரனுக்கு சாபம்

சிவன், பார்வதி குடிகொண்டிருக்கும் கயிலாய மலையை சேதப்படுத்தும் நோக்கத்தில் தேவலோக தலைவனான இந்திரன் அதை முற்றுகையிட முயற்சிக்கிறார். இதனையறிந்த கயிலாய மலையின் காவல் வாகனமான நந்தி, அவரை தாக்குகிறது. இதனால் பின்வாங்கும் இந்திரன் மீண்டும் தேவலோக தலைநகர் அமராவதிக்கு திரும்புகிறார். இதனை கண்ட சிவபெருமான், இந்திரனின் ஆணவத்தை அழித்து பாடம் புகட்ட எண்ணுகிறார். இதற்காக, தவத்தில் சிறந்தவரான துர்வாச முனிவரிடம் இந்திரனை சோதித்து, அவனுக்கு தக்க பாடம் புகட்டச் சொல்லி அனுப்புகிறார். அப்போது சிவன் கட்டளைப்படி, பராசக்தி கொடுத்து அனுப்பிய அற்புத மாலை ஒன்றை துர்வாச முனிவர் பெற்றுக்கொண்டு, தேவலோகத்திலுள்ள அமராவதிக்கு செல்கிறார்.

மற்ற மலைகளை தாக்க முடிந்த வலிமைமிக்க பலசாலியான தன்னால், ஏன் கயிலை மலைக்குள் செல்ல முடியவில்லை? நந்தியை எதிர்க்க முடியாதது ஏன் என இந்திரன் சிந்திக்க தொடங்கினார். இதற்கு என்ன காரணம் என்று தேவலோக குருவான பிரகஸ்பதியிடம் கேட்கிறார் இந்திரன். அதற்கு அவர், ‘‘கயிலை மலையை நீ தாக்க முயன்றது தவறு. பாவச்செயல் செய்தவனாக ஆகி விட்டாய். அதற்கான தண்டனையை சிறிதேனும் அனுபவிக்காமல், பரிகாரம் செய்யாமல் பாவ வினையிலிருந்து தப்பிக்க முடியாது அனுபவித்தே தீர வேண்டும்’’ என எடுத்துரைக்கிறார். அப்போது அங்கு வரும் துர்வாச முனிவர், ‘‘என்னிடம் இருக்கும் இந்த அற்புத மாலையை அணிந்து கொள். பாவ விமோசனத்திலிருந்து விடுதலை கிடைக்கும்’’ என இந்திரனிடம் மாலையை வழங்குகிறார்.

இந்த சாதாரண மாலை என் பாவ வினையை தீர்க்கும் வல்லமை படைத்ததா என கூறியபடியே, மாலையை தனது வாகனமான வெள்ளை யானையின் மேல் தூக்கி போட்டு விட்டு செல்கிறான் இந்திரன். யானையின் மீது கிடந்த மாலையிலிருந்த மலர்களின் நறுமணத்திற்கு வந்த வண்டுகள், யானையை தொல்லை செய்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த யானை, அந்த மாலையை தும்பிக்கையால் எடுத்து காலால் மிதித்து மலர்களை நாசமாக்கியது. இதனைக் கண்ட துர்வாசர், ‘‘இது அன்னை பராசக்தி தந்த மாலை. இதனை அவமதித்துவிட்டாய். எனவே, தேவலோகம் சக்தியை இழந்து தேவர்கள் நரை, மூப்புக்கு ஆளாகுவீர்கள். யானை மதம் பிடித்து திரியும்’’ என இந்திரனுக்கு சாபம் இடுகிறார்.- சாமியே சரணம் ஐயப்பா (நாளையும் தரிசிப்போம்)

The post ஐயப்பன் அறிவோம் 13 – இந்திரனுக்கு சாபம் appeared first on Dinakaran.

Related Stories: