அதன்படி அடுத்த 2 ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க பாக்ஸ்கான் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் ஐ-போன்களுடன், ஐ-பேட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் ஏற்கனவே இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளிநாட்டு முதலீடுகள் அதிலும் குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளை வேகமாக செயல்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. அதேபோல் தமிழ்நாடு பொறியியல் மற்றும் உற்பத்தி துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இது உயர் தொழில்நுட்ப உற்பத்தி செயல்பாடுகளுக்கு எளிதாக அதிகப்படியான தொழிலாளர்கள், மேலும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் சென்னை அமைந்துள்ளதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் பல்வேறு போக்குவரத்து மூலம் எளிதாக இணைக்கப்படுகிறது.
இதற்கு ஏதுவாக சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் என லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் செயல்பாடுகளில் சென்னை சிறந்து விளங்குகிறது. இவ்வாறான காரணத்தால் பாக்ஸ்கான் சென்னையில் தொடர்ந்து முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதன்படி பாக்ஸ்கான் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது உற்பத்தி வளாகத்தை கூடுதலாக விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
இந்த விரிவாக்கத்திற்காக தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1,792 கோடி முதலீடு செய்ய உள்ளது. மேலும், இதன் மூலம் 1.24 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட உற்பத்தி தளத்தை உருவாக்க உள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் சுமார் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும். ஏற்கனவே பாக்ஸ்கான் சென்னை மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளில் ஊழியர்களை பணியில் சேர்க்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
மேலும் பாக்ஸ்கான் ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனங்களுக்கு பாலினம், வயது வரம்பு, திருமணமானவர்களுக்கு வேலையில்லை என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது என தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பாக்ஸ்கான் நிர்வாகம் தற்போது 1.24 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட உற்பத்தி தளம் விரிவாக்கத்திற்கான ஒப்புதல்களுக்கு தமிழ்நாடு அரசிடம் சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விண்ணப்பித்துள்ளது. இந்த விரிவாக்க பணிகள் முடிந்தால் சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் சுமார் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதுவரை 40 ஆயிரம் பேருக்கு வேலை…
* ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது பாக்ஸ்கான் நிறுவனம்.
* விரிவாக்கம் மூலம் கூடுதலாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு.
* 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டம்.
* ஏற்கனவே ரூ.2601 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை மூலம் 40,000 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* இந்தியாவில் ப்ரீமியம் வகை மொபைல் போன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை.
The post தமிழ்நாட்டில் ரூ.1792 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது பாக்ஸ்கான் நிறுவனம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது, 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு appeared first on Dinakaran.