தமிழ்நாட்டில் முதல்முறையாக பழங்குடியின பெண்களை உதவி செவிலியராக்கும் பயிற்சி: தொல்குடி வாழ்வாதார திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பு; முன்னணி மருத்துவமனைகளில் பணி ஆணை வழங்க முடிவு

* சிறப்பு செய்தி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 8 லட்சம் பழங்குடியினர் (1.10%) இருப்பதாகவும், இதில் 37 உட்பிரிவில் பழங்குடியினர்கள் வாழ்ந்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து பழங்குடியினர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம் தொல்குடி திட்டத்தில் கீழ் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்நுட்பக்கல்வி, ஐடிஐ படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.

மலைப்பகுதிகளில் இயங்கிவரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாவட்ட திட்ட அலுவலர் தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் திரட்டி, பழங்குடியின நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதில் 146 இளைஞர்களுக்கு இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிப்புரிவதற்கான பணி ஆணையை கடந்த ஜூலை மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

பழங்குடியின பெண்களுக்கு மருத்துவ துறையில் வேலைவாய்ப்புகளை பெற்று தரும் வகையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக உதவி செவிலியர் பணி செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் (கொடைக்கானல்) மாவட்டங்களில் வேலைவாய்ப்பு வழிக்காட்டுதல் முகாமினை நடத்தினோம். அதிகமான பெண்கள் கலந்துகொண்ட இந்த முகாம் மூலமாக 207 பேர் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக சோளாகர் பழங்குடியினர் 11 பேர் , ஊராளி பழங்குடியினர் 4, காணி பழங்குடியினர் 2 பேர், பளியர் பழங்குடியினர் 3 பேர் மற்றும் இருளர் 21 பேர், குரும்பர் 3 பேர் என ஒட்டுமொத்தமாக 44 பெண்கள் தேர்வாகினர்.

தற்போது உதவி செவிலியராக பணிபுரிவதற்கான பயிற்சி வகுப்புகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியல் உள்ள மருத்துவ கிறிஸ்தவ கல்லுரியில் (எம்.சி.சி.) ஒரு வருடப்பயிற்சி வழங்கப்பட உள்ளன. சோளாகர், ஊராளி, காணி மற்றும் பளியர் இனத்தவர் காடு மற்றும் இயற்கையின் இணைப்பில் தங்களின் வாழ்வியலை அமைத்துக்கொண்டுள்ளனர். வேளாண்மை மூலம் தொழில் செய்து தங்களின் வாழ்க்கையை வாழ்ந்துவருவதால், வெளி உலகத்தில் உள்ள வாய்ப்புகளை தவறவிடுகின்றனர்.

இதனை கண்டறிந்து அவர்களிடம் முகாம் மூலமாக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி தற்போது அவர்களுக்கு பயிற்சியும் வழங்க உள்ளோம். இப்பயிற்சி முடிவில் அவர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் பணி ஆணை வழங்கவும் முடிவு செய்துள்ளோம். மேலும், இப்பெண்களுக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவும் பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல், அடுத்தகட்டமாக வரும் 23ம் தேதி 4 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் வழிக்காட்டுதல் முகாம் நடத்திட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ஊக்கத்தொகையுடன் பயிற்சி
இந்தாண்டு பழங்குடியின மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியினை அளிக்கும் விதமாக ரூ.4.31 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பயிற்சி பெறுபவர்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் ஊக்கத்தொகையுடன் தங்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் மு.கஸ்டாலினுக்கு நன்றியை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அழிவின் விளிம்பு நிலை பழங்குடியினத்தில் முக்கியமாக சோளகர், ஊராளி, காணி மற்றும் பளியர் முதன்மையாக உள்ளன. இவர்களின் வாழ்வியல், தொழில் மற்றும் மொழி குறித்த சில தகவல்கள் பின்வருமாறு:
* சோளகர் பழங்குடியினர்: இவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மலை மற்றும் மலை சார்ந்த இடங்களில் அதிகம் வசிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இந்த சோளகர் பழங்குடியினர் காடுகளில் வேட்டையாடுதலை முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் சோளகர் எனப்படும் மொழியை பேசுகின்றனர்.

* ஊராளி பழங்குடியினர்: தமிழ்நாட்டில் நீலகிரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். அரையன், பில்லியன் என்னும் இரட்டை சகோதரர்கள் வம்சம் என்றும், பாண்டிய மன்னர்களுக்கு குடை பிடித்தவர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். ஊராளி பழங்குடியினர் மலையாளம் கலந்த தமிழ் மொழியை பேசுபவர்களாக உள்ளனர். மேலும், இவர்களது பொருளாதாரம் வேளாண்மை மற்றும் கால்நடைகளை மேய்தல் சார்ந்தே உள்ளன. 19ம் நூற்றாண்டில் இவர்களின் நிலம் ஆங்கிலேயர்களால் பறிக்கப்பட்டு காபி, தேயிலை பயிரிடப்பயன்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்கு பின்னர் ஆதிக்க சமூதாயத்தினரால் பறிக்கப்பட்ட நிலத்திலேயே கூலி தொழிலாளியாக இருந்து வருகின்றனர்.

* பளியர் பழங்குடியினர்: தென் இந்தியாவில் மிகவும் பழமையான பழங்குடியின மக்களாக பளியர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, பழனி, வருசநாடு மலைப்பகுதிகளை இருப்பிடமாக கொண்டுள்ளனர். பாறைகளின் உச்சியில் இருக்கும் தேனை எடுக்கும் தொழில்களை செய்து வருகின்றனர்.

* காணி பழங்குடியினர்: தமிழக-கேரள மாநிலங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்கின்றனர். காணிக்காரர் என்ற மொழி பேசுபவர்களாக உள்ளனர்.இவர்களுக்கு வேளாண்மை முக்கிய தொழிலாக உள்ளன. மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.

* இளவயது திருமணங்கள் தடுப்பு
இந்தியாவில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி பழங்குடியின மக்களிடையே குழந்தை திருமணம் மற்றும் இளம்வயது திருமண நிகழ்வுகள் அதிகம் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு காரணம், சமூக நடைமுறை, கல்வி நிலை, இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பாரம்பரிய நெறிமுறை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. குறிப்பாக தற்போது பழங்குடியின பெண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளால் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற்று பொருளாதார ரீதியாக தங்களை பலப்படுத்தி கொள்வதாகவும், இதனால் சுய சிந்தனை மூலமாக இளம் வயது திருமணத்தை தவிர்த்து வெற்றி இலக்கை நோக்கி பயணிப்பதாக பயிற்சி பெறக்கூடிய பெண்கள் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் முதல்முறையாக பழங்குடியின பெண்களை உதவி செவிலியராக்கும் பயிற்சி: தொல்குடி வாழ்வாதார திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பு; முன்னணி மருத்துவமனைகளில் பணி ஆணை வழங்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: