சென்னை நதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் தமிழக அரசு: ரூ. 744.6 கோடி அடையாறு நதிக்காக ஒதுக்கீடு, கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சிக்கு மீண்டும் புத்துயிர்

* ‘ஒன் ரிவர், ஒன் ஆபரேட்டர்’ திட்டத்தின் கீழ் புதிய நிறுவனம் தொடங்க திட்டம்

* சென்னை நகருக்குள் பாயும் சமூக-சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நதிகளை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டுள்ளன. சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையை உருவாக்கி, அந்த அறக்கட்டளையின்கீழ் சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு மீட்டுருவாக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

சென்னையில் ஓடும் கூவம் ஆற்றில் 1940-கள் வரையிலும்கூட தெளிந்த நல்ல நீர் ஓடியது. சென்னையின் அபரிதமான வளர்ச்சி ஒரு ஆற்றை கழிவுநீர் கால்வாயாக மாற்றிவிட்டது. இன்று கூவம் என்றால் ஆறு என்பது மறந்து துர்நாற்றம் நிறைந்த கழிவுநீர் கால்வாய்க்கு உதாரணமாகவும் திகழ்கிறது. அவ்வப்போது, கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கூவம் எப்போது ஒரு நதியாக மீண்டும் மீட்டு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நீண்டநாள் கனவாகவே இருந்து வருகிறது.

கூவம் நதியை சீரமைத்து மீட்டெடுக்க, 2006-2011 திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய மேயர் மா. சுப்பிரமணியன் முயற்சியில் அமெரிக்க சான் ஆண்டனியோ மாகாணத்துடன் சென்னை மாநகராட்சி நீர்நிலைகள் மீட்டெடுத்தல் தொடர்பாக சகோதர ஒப்பந்தமும் கையெழுத்தானது. பின்னர் அதிமுக ஆட்சிக் காலத்தில் இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. மீண்டும் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் நதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது.

குறிப்பாக, சமூக-சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நதிகளை மீட்டுருவாக்க, மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையை உருவாக்கியது. கடந்த 30 ஆண்டுகளாக அடையாறு நதியில், கட்டுமானக் கழிவுகள் முதல் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் வரை பலவும் கொட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நகருக்குள் பாயும் சமூக-சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நதிகளை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையை உருவாக்கியது.

அந்த அறக்கட்டளையின்கீழ் சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. அடையாறு நதிக்காக இந்தத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.744.6 கோடியில், இதுவரை ரூ.453.1 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும், இந்தத் திட்டத்தின்கீழ், அடையாற்றுக் கரையோரப் பகுதிகளில் இருந்து 8,891 மில்லியன் டன் திடக்கழிவுகளையும், 3,505 மில்லியன் டன் குப்பைகளையும் அகற்றியுள்ளதாக சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.

அடையாறு நதி மறுசீரமைப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட நிதியில் முதல்கட்டப் பணிகளில் ஒன்றாக, அடையாறு நதியின் எல்லைகளை வரையறை செய்துள்ளோம். இந்தப் பணியின்கீழ், ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இதுவரை 5,122 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். கூடுதலாக, 4,367 பேரை இடம் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், பொதுப்பணித்துறை தகவல்களின்படி, திரு.வி.க. பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரையிலான 2,353 மீட்டர் நீளத்திற்கும், கோட்டூர்புரம் பாலம் முதல் சைதாப்பேட்டை பாலம் வரையிலான 2,892 மீட்டர் நீளத்திற்கும் நதியில் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது.

நதியோரம் 650 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதோடு, ஜாஃபர்கான்பேட்டை பாலம் முதல் மணப்பாக்கம் தடுப்பணை வரை 3,334 மீட்டர் நீளத்திற்கு வண்டல் எடுக்கும் பணிகளும் 500 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் கூறியதாவது: நதிகள் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, மிக முக்கியமான பணி கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதுதான்.

கடலோர பாதுகாப்பு மண்டலத்தின் அனுமதி வாங்கி, அதற்கென குறிப்பிட்ட திட்டம் வகுத்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மட்டுமே முகத்துவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் ஆமை முட்டையிடும் காலம் உள்பட பல்வேறு காரணங்களுக்காக மற்ற காலங்களில் அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த 3 மாதங்களில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துள்ளோம்.

தற்போது வடகிழக்குப் பருவமழையின்போது ஆற்றில் நீரோட்டம் எப்படி இருக்கிறது என்ற விஷயங்களை ஆய்வு செய்து, தரவுகளைச் சேகரித்த பிறகு, அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் புதிய திட்டத்தின்கீழ், அடையாறு நதியின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரை, பல்வேறு இடங்களில் கால்வாய்கள் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. பிறகு அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின்னரே, அந்த நீர் ஆற்றில் திறந்துவிடப்படும்.

இப்போதுள்ள கட்டமைப்புகளில் நாளொன்றுக்கு 80-90 எம்.எல்.டி வரையிலான கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் பணிகள் முடிவடைந்த பிறகு, சுமார் 200 எம்.எல்.டி வரையிலான கழிவுநீரைச் சுத்திகரிக்க முடியும். அடையாறு நதிக்கான இந்தப் புதிய திட்டத்தின் பணிகள் நிறைவடையும்போது, நதிநீரின் தரம் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அளவீடுகளின்படி, “ஸ்கேல் 4” என்ற அளவில் இருக்கும்.

அதாவது, “அவற்றைக் குடிக்க முடியாது என்றாலும், அவற்றில் உயிர்ச்சூழல் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு ஆற்றின் தரம் உயர்ந்திருக்கும். மேலும் சென்னை புறநகர்ப் பகுதிகளான, பம்மல், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி கழிவுநீர் கால்வாய்கள் அமைத்ததன் மூலம், அங்கிருந்து ஆற்றில் கலக்கும் கழிவுநீரின் அளவு குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உள்ளேயே சில இடங்களை அடையாளம் கண்டு, மெட்ரோ நீர் வாரியத்தின் மூலமாக, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.61 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சுத்திரிகரிப்பு நிலையங்களில் சில செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. மேலும் சில, இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வந்துவிடும். இவற்றின் மூலம் அடையாறு நதியில் கலக்கும் கழிவு நீரின் அளவு குறைக்கப்படும். அடுத்தகட்டமாக “ஒன் ரிவர், ஒன் ஆபரேட்டர்” என்ற திட்டத்தின் கீழ், ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டு, நதி மறுசீரமைப்புக்கான அனைத்துப் பணிகளும் அதன்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

* அடையாற்றை மீட்டெடுத்தால்…
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சூழலியல் ஆர்வலருமான சுந்தர்ராஜன் கூறியதாவது: இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு நதியை மீட்டெடுக்க முடிந்தால், அதன்மூலம் சூழலியல் ரீதியாக மட்டுமின்றி சமூக, பொருளதார ரீதியாகப் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அடையாற்றை மீட்டெடுப்பதன் மூலம், அதன் கழிமுகப் பகுதியில் பல்லுயிர் வளம் பெருகும்.

அடையாற்றை மீட்டெடுத்தால், அதை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அது பொருளாதார ரீதியாக ஆற்றைச் சார்ந்து வாழும் மீனவ சமூகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், “அடையாற்றின் கரையோரங்களில் இருக்கும் குடியிருப்புகளை அகற்றுவதைவிட முக்கியமானது, அதன் வெள்ள வடிகால் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது.

அதைச் செய்தால், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் கணிசமாகக் குறைப்பதற்கான இயற்கை செயல்பாடுகள் தானாக நடைபெறும். அடையாற்றை மீட்டெடுப்பதன் மூலம், அதன் கழிமுகப் பகுதியில் பல்லுயிர் வளம் பெருகுவதோடு, மக்களுக்கு ஆரோக்கியமான மீன் உணவுகள் கிடைக்கும். இவை மட்டுமின்றி, அடையாற்றை மீட்டெடுப்பது சுகாதார அடிப்படையில், சென்னை மக்களுக்குத் தற்போது மாசுபட்ட நீரினால் பரவக்கூடிய பல நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் என்றார்.

The post சென்னை நதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் தமிழக அரசு: ரூ. 744.6 கோடி அடையாறு நதிக்காக ஒதுக்கீடு, கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சிக்கு மீண்டும் புத்துயிர் appeared first on Dinakaran.

Related Stories: