* காரணமறிய அறிவியல் பூர்வ ஆய்வு அவசியம்
சிறப்பு செய்தி
இயற்கை-வனம்-பாதுகாப்பு இவை மூன்றையும் மேற்கொள்வதில் ஒன்றிய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. நாட்டின் நிலப்பரப்பில் 33 சதவீதம் வனமாக இருக்க பல்வேறு திட்டங்களை தீட்டி, பசுமையாக்கல் நடவடிக்கையை எடுக்கின்றனர். இருப்பினும் வனவிலங்குகள், மனித மோதல் என்பது கால காலத்திற்கும் இருந்து வருகிறது. வனத்தை ஒட்டிய கிராமங்கள், மலைக்கிராமங்களில் இத்தகைய செயல்கள் தினந்தோறும் அரங்கேறுகிறது. இந்த வனவிலங்குகள்-மனித மோதலில் அதிக உயிரிழப்பை பெரும்பாலும் யானைகளே சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையை மையமாக கொண்டு, கேரளாவில் தொடங்கி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என மகாராஷ்டிரா வரையில் உள்ள அடர்ந்த வனத்தில் அதிகப்படியான யானைகள் வாழ்கின்றன. அதேபோல், அசாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள வனத்திலும் ஆசிய யானைகள் ஏராளம் உள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பு படி இந்தியாவில் தற்போது 29 ஆயிரம் யானைகள் இருக்கின்றன.
இவற்றில் 10 சதவீதம், அதாவது சுமார் 3,000 யானைகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, முண்டன்துறை, முதுமலை, நீலகிரி, சத்தியமங்கலம், மேட்டூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் யானைகள், அவ்வப்போது வனத்தை ஒட்டிய கிராமங்களுக்கு வந்து விடுகின்றன. இதனால், மனித மோதல் ஏற்படுகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் யானைகள் தாக்கி சுமார் 200 பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல், மனிதர்களால் சுமார் 220 யானைகள் இறந்திருக்கின்றன. இவற்றில் கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 12 ஆண்டில், 147 மனிதர்களும், 176 யானைகளும் பலியாகியுள்ளன. இதில், மனித மோதலால் 109 யானைகளும், இயற்கையாகவும், பிற காரணங்களாலும் 67 யானைகள் உயிரிழந்துள்ளன.
மேலும், இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் மற்றும் சொத்துகள் யானைகளால் சேதமடைகின்றன.
யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கும் நிலையில், கேரளா, அசாம், கர்நாடகா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இங்கும் அதிகளவு மனித மோதல்களால், யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. யானைகள் ஆண்டாண்டு காலமாக நடந்து சென்ற பாதைகள், முன்பு மேய்ச்சல் நிலங்களாக இருந்தன. இந்த நிலங்களில், தற்போது ஆழ்துளை கிணறு அமைத்து, கரும்பு, வாழை என்று விவசாயம் பார்க்கத் தொடங்கிவிட்டனர். வனத்தை ஒட்டிய பட்டா நிலங்களில், கல்வி நிறுவனம், ஆசிரமம் மற்றும் குடியிருப்புகள் என அதிகப்படியான கட்டுமானங்கள் வந்துவிட்டன. இதனால், யானையின் பாதை மிகவும் குறுகலாகிவிட்டது. அவை வனத்தை விட்டு வெளியே வரும் போது, மின்வேலியில் சிக்கி இறக்க நேரிடுகிறது. அதேபோல், சிலர் காட்டிற்குள் சென்று பயிர்களை அழிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக சுட்டுக்கொல்கின்றனர்.
யானைகள் உயிரிழப்பை தடுக்க தமிழ்நாடு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வனத்தை ஒட்டிய நிலங்களில் மின்வேலி அமைக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிக்குள் மக்கள் செல்ல அனுமதிப்பதில்லை. வன ஊழியர்களின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அகழி, தொங்கும் சோலார் வேலிகள், ரயில் தடங்களுக்கு அருகில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் என பகுதிக்கேற்ப யானை-மனித மோதல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் யானைகளின் இறப்பை கணக்கிடும்போது, தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு என்பது கட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது மொத்தமுள்ள 3000 யானைகளில் 2 முதல் 3 சதவீத இறப்புதான் நிகழ்கிறது. இதுவே 5 சதவீதத்திற்கு மேல் சென்றால் அச்சப்பட வேண்டும். தமிழ்நாடு போலவே அசாம், கேரளாவில் அதிகளவு யானைகள் இறக்கின்றன. ஆனால், அந்த மாநிலங்களில் எல்லாம் யானைகள் குறித்த ஆராய்ச்சி அதிகம் இல்லை. தமிழ்நாட்டில்தான், கணக்கெடுப்பு, ஆராய்ச்சி, யானை இறப்பு தடுப்பு நடவடிக்கைகள் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.
யானை-மனித மோதல்களை தடுக்க அறிவியல் பூர்வ நடவடிக்கை அவசியம் தேவைப்படுகிறது. அதாவது, யானைகள் அதிகம் வசிக்கும் நீலகிரி, முதுமலை, சத்தியமங்கலம், ஆணைமலை, ஓசூர் பகுதிகளில் அரசு சார்பில் நேரடி கள ஆய்வு நடத்தி, எக்காரணத்திற்காக காட்டிற்குள் இருந்து யானைகள் வெளியே வருகின்றன, அந்த யானைகளுடன் மனித மோதல் ஏற்பட காரணமென்ன என்பதை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். பிறகு, அந்த ஆய்வறிக்கை மூலம் தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால், மனித மோதலால் யானைகள் உயிரிழப்பு வெகுவாக குறைக்கப்படும். இதன்மூலம் மனிதர்கள் இறப்பும் இல்லாமல் போகும். இவ்வாறு அவர் கூறினார்.
அந்நிய களைச்செடிகள் பரவல் ஒரு காரணம்
மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள், வனத்தை ஒட்டிய கிராம பகுதிக்கு இடம்பெயர்ந்து வர பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் வனத்தில் பரவியிருக்கும் ஆக்கிரமிப்பு தாவரங்களும் ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, யானைகள் காட்டைவிட்டு வெளியே வருவதற்கு, அந்நிய களைச்செடிகள் அதிகம் பரவியதும் ஒரு காரணமாகும். வனத்தில் இருக்கும் புல்வெளிகள் அனைத்திலும் ‘லன்டானா காமிரா’ என்ற அந்நிய களைச்செடிகள் பரவியுள்ளன. இதனால் யானைகளின் மேய்ச்சல் பரப்பு குறைந்துள்ளது. இதன்காரணமாக விவசாய நிலங்களில் யானைகள் ஊடுருவல் ஏற்படுகிறது. அந்த அந்நிய களைச்செடிகளை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பரப்பு, நீர்நிலைகள் அதிகரிக்க நடவடிக்கை
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் வனப்பரப்பின் அளவை 23 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், 11,500 சதுர கி.மீ., பரப்பளவில் 260 கோடி நாட்டு மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், யானை உள்பட வன விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை ஒட்டிய பகுதிக்கு வருவதை தடுக்க வனத்திற்குள் நீர்நிலைகளை உருவாக்கும் பணிகள் நடக்கிறது. மேலும், மெய்ப்புலம் என்ற திட்டத்தில் மேய்ச்சல் நிலங்களை அதிகப்படுத்துதல், தடம் என்ற திட்டத்தின் மூலம் யானை-மனித மோதலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
நேபாளம் வரை யானை வழித்தடம்
இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள் நேபாளம் வரை சென்று வர யானை வழித்தடங்கள் இருந்தன. முந்தைய காலத்தில் கேரளா, தமிழ்நாட்டில் இருக்கும் யானைகள், இங்கிருந்து நேபாளம் வரை கடந்து செல்ல காடுகளின் ஊடே தொடர்ச்சியாக வழித்தடங்கள் இருந்தன. ஆனால், தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்குள் யானைகளின் வாழ்விடம் சுருங்கிவிட்டது. அந்த வழித்தடங்களையும் துண்டிக்கும் போது தான், அவை ஊருக்குள் நுழைகிறது. தமிழ்நாடு அரசு வனத்துறை யானை வழித்தடம் பற்றிய வரைவு அறிக்கையை தயார் செய்து, அதன் மூலம் 40 வழித்தடங்களை பாதுகாக்கிறது. இதனால்தான், தற்போது ஓரளவிற்கு யானை-மனித மோதல் தடுக்கப்படுகிறது.
The post இந்தியாவில் மனித மோதல் காரணமாக யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம் appeared first on Dinakaran.