* கோயம்பேடு சந்தையில் வெற்றிகரமாக செயல்படுகிறது
ஆதிதிராவிட மக்களுக்கு அரசின் சார்பில் வீடுகளை கட்டி கொடுக்கும் நிறுவனமாக கடந்த 1974ல், கலைஞரின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நடவடிக்கையாக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை உள்ளன.
தாட்கோ மூலம் கடந்த சில ஆண்டுகளாக தனிநபர்களுக்கு என பொதுவாக கடன் வழங்கப்படுகிறது. இதில் ஒரு புதிய முயற்சியாக கோயம்பேடு போன்ற சந்தை பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வியாபாரிகளுக்கு தாட்கோ மூலம் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டு கடந்த ஓராண்டாக அவை வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சில்லறை வியாபாரிகளுக்கு “சிறு வணிக கடன்” என்ற திட்டம் மூலம் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக சென்னையின் வர்த்தக ரீதியான மிகப்பெரிய வியாபார ஸ்தலமாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யப்படுகிறது. இங்கு கடை வைத்திருக்கும் சிறு, குறு வியாபாரிகள் தினசரி சந்தை மதிப்பீட்டின்படி பொருட்களை வாங்க வெளிநபர்களிடம் இருந்து “ஸ்பீடு வட்டி” எனப்படும் அதிக வட்டியில் பணம் வாங்கி வியாபாரம் செய்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தாட்கோ கடன்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக இதுபோன்ற கடன் பெறக்கூடிய வியாபாரிகள் காய்கறி, பழம் மற்றும் பூ போன்ற பொருட்கள் மீது முதலீடு செய்கின்றனர். இதன் மூலம் வரக்கூடிய வருவாயை தினசரி கடன்களை அடைத்து விட்டு, அதிக தொகையை பெறக்கூடிய நபர்களாக உருவெடுக்கின்றனர். இதன் மூலம் ஸ்பீடு வட்டி, கந்து வட்டி போன்ற பண முதலைகளிடம் சிக்காமல் எளிதில் தாட்கோ மூலம் சங்கங்கள் வாயிலாக கடனை வாங்கி அடைக்கின்றனர். இந்நிலையில் சங்கங்கள் அமைக்கப்பட்டு அந்த சங்கத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சங்களுக்கு கடன் வழங்கும் புதிய முயற்சியை தாட்கோ மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலம் தாட்கோவிற்கு 4 சதவீதம் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தாட்கோ அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு சந்தையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கந்து வட்டி முறையில் கடன்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் உழைப்பை வேறு நபர்கள் சுரண்டி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாரத்தை முன்னேற்றம் வகையில் தாட்கோ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு சங்கம் உருவாக்கப்பட்டது.
இதற்கு தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மேம்பாட்டு கழகம் மூலம் 4 சதவீத வட்டியில் சங்கத்திற்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த சங்கம் 2.5 சதவீத வட்டி நிர்ணயித்து 6.5 சதவீத வட்டியில் வியாபாரிகளுக்கு கடன் வழங்குகிறது. முதற்கட்டமாக இச்சங்கம் 46 நபர்களுடன் தொடங்கப்பட்டது. நபர் ஒருவருக்கு ரூ.1.25 லட்சம் கடன் வீதம் ரூ.57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக 69 நபர்கள், 3ம் கட்டமாக 73 நபர்கள் என மொத்தம் 250 நபர்கள் சங்கத்தில் இணைந்துள்ளனர். இவ்வாறான சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படுவதால் குறுகிய காலத்தில் கடன் அடைக்கப்பட்டு மீண்டும் கடன் பெறுகின்றனர்.
மேலும் இதே தி்ட்டம் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனிடையே கடந்த பல ஆண்டுகளாக தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் சிறு வணிக கடன் திட்டத்தை பாராட்டியுள்ளது. மேலும் இதனை பிற மாநிலங்களில் செயல்படுத்தவதற்கான வழிமுறைகளை ஒன்றிய அரசின் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர். இந்த நிதியாண்டிற்குள் ரூ.100 கோடி கடன் கொடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* தற்கொலையில் இருந்து மீளும் வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் சில்லறை வணிகர்கள் தொழிலில் முதலீடு செய்ய அதிக வட்டிக்கு பணம் பெறுகின்றனர். குறிப்பாக ரூ.10,000 வாங்கினால் அதற்கு மாத, மாதம் ரூ.6,000 வட்டி கொடுக்க வேண்டும் என புரோக்கர்கள் மூலமாக பணம் விநியோகிக்கப்படுகிறது. பணம் தராதபட்சத்தில் வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர்.
ஸ்பீடு வட்டி, கந்து வட்டி, தண்டல், மாத தவணையில் தொகை செலுத்துதல் என பல்வேறு வகைகளில் வர்த்தகம் செய்ய வியாபாரத்திற்கு என கொடுக்கப்பட்டாலும், அசலை விட வட்டியே அதிகம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணவே தாட்கோ மூலம் தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* பல மாவட்டங்களிலும் விரிவுபடுத்த திட்டம்
தாட்கோ சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்டு வரும் இந்த சிறு வணிக கடன் திட்டம் மேலும் பல்வேறு மாவட்டங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய வியாபார சந்தைகளில் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க தாட்கோ அதிகாரிகள் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர்.
கடன் பெற செய்ய வேண்டியவை?
* ஜெய்பீம் உழைப்பாளர் மற்றும் சிறு வியாபாரிகள் பொது நலச்சங்கம் மூலமாக 7299913999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
* தாட்கோ மூலமாக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மூலமாக கடன் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரே தகுதியானவர்கள்.
* 18 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் எளிதில் கடன் பெறலாம்.
* கடன் கொடுத்த 3 வருடங்களுக்குள் வியாபாரிகள் அத்தொகையை அடைக்க வேண்டும்.
* தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலம் 100க்கு 4 சதவீதம் தாட்கோவிற்கு கடன் கொடுக்கப்படுகிறது. இக்கடன் சங்கங்கள் மூலமாக வியாபாரிகளுக்கு 6.5 சதவீதத்திற்கு விநியோகிக்கப்படுகிறது.
The post சில்லறை வியாபாரிகளை வாழ வைக்கும் தாட்கோ சிறுவணிக கடன் திட்டம்: மதுரை, திருச்சியிலும் விரிவுபடுத்த திட்டம், ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு appeared first on Dinakaran.