கட்டுப்படுத்துவதில் மட்டுமல்ல; தடுப்பதிலும் கவனம் செலுத்துங்க…; இன்று உலக நீரிழிவு தினம்: மருத்துவர்கள் அட்வைஸ்

தாம்பரம்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 53 கோடிக்கும் அதிகமான மக்களை பாதிக்கும் நோயாகவும், இறப்புக்கான முதல் 10 காரணங்களில் ஒன்றாகவும் நீரிழிவு நோய் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடல் பருமன், ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் சூழல் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது இந்த நோய் வராமல் தடுக்கலாம். இந்த ஆண்டுக்கான நீரிழிவு தினம் ‘தடைகளை தகர்த்தல், இடைவெளிகளைக் குறைத்தல்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயின் பாதிப்பை குறைப்பதன் முக்கியத்துவத்தை கூறுவதோடு, நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் தரமான சிகிச்சைகள் குறித்தும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூற உள்ளது.

இதுகுறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் உள்மருத்துவ பிரிவு டாக்டர் ஸ்பூர்த்தி அருண் கூறியதாவது:
நீரிழிவு நோய் நாள்பட்ட நிலையில் உயர்ந்த ரத்த சர்க்கரை அளவுகளால் குறிக்கப்படுகிறது. அவை, வகை 1 மற்றும் வகை 2 என்று குறிப்பிடப்படுகிறது. வகை 1 நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தை பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ கண்டறியப்படுகிறது. உடலால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் இதற்கு இன்சுலின் சிகிச்சை தேவைப்படுகிறது. வகை 2ஐ பொறுத்தவரை 90 சதவீதம் பேருக்கு உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி இல்லாமல் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. இது, இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கிறது. கடந்த 2021ம் ஆண்டில் உலகளவில் சுமார் 42.2 கோடிக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், 50 சதவீத நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு இந்த நோய் இருப்பது குறித்து அறியாமல் உள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 15 லட்சம் இறப்புகளில் நீரிழிவு நோய் காரணமாக இறப்பவர்களின் விகிதமும் அதிகளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம் மற்றும் கண்கள் போன்றவை பாதிக்கப்படும். மேலும் நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் இதுபோன்ற எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் தடுக்கலாம். தற்போதைய காலக்கட்டத்தில் நீரிழிவுநோய் அதிகரித்து வரும் சூழலில், அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. அதற்கு வாழ்க்கை முறை மாற்றம் அவசியம் ஆகும்.

நீரிழிவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், கடுமையான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். தடுப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் வகை 1 நீரிழிவு நோயைத் தடுக்க முடியாது என்றாலும், வகை 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு பழக்கவழக்கம் மற்றும் ஆரோக்கியமான உடல் எடை பராமரிப்பு போன்ற சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலையை உருவாக்கும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும். மேலும், சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள்கூட நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். நீரிழிவு நோயாளிகள் முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது அதிக ஆபத்து இல்லாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

எளிய ரத்த பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையில் கண்டறியலாம். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்து அதிக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். இதுபோன்ற பரிசோதனை திட்டங்கள் மிகவும் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. உலக நீரிழிவு தினத்தின் முக்கிய நோக்கம், தனிநபர்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும், வராமல் தடுக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இது மருத்துவர்கள் முதல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரை, ஒரு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்துவதோடு, நடைமுறை வழிகாட்டுதலையும் வழங்கும். மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உடல்நலம் குறித்து அறிந்து அதற்கேற்ற முடிவுகளை எடுக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் அதற்கு சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்போது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். உலக நீரிழிவு நோய் தினம் என்பது விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிறந்த வாழ்க்கை முறை நடைமுறைகளை வலியுறுத்துவதற்கான ஒரு தினம் ஆகும்.

இதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முறையான மருத்துவ பரிசோதனைகளை வலியுறுத்துவதன் மூலம் வரும் காலங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும். இந்த உலக நீரிழிவு நோய் தினம் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய ஒருங்கிணைந்த முயற்சியாகும். கூடுதல் விழிப்புணர்வு, அனைவரும் அணுகக்கூடிய வகையிலான மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோய் தாக்கத்தை வெகுவாக குறைக்கலாம். நீரிழிவு நோய் குறித்து முன்கூட்டியே கண்டறிந்து தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலம் ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடனும் நீரிழிவு நோய் இல்லாத சமூகத்தையும் உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

The post கட்டுப்படுத்துவதில் மட்டுமல்ல; தடுப்பதிலும் கவனம் செலுத்துங்க…; இன்று உலக நீரிழிவு தினம்: மருத்துவர்கள் அட்வைஸ் appeared first on Dinakaran.

Related Stories: