நுண்ணீர் பாசன முறை செயல்படுத்த நீர்வளத்துறை பரிந்துரை: பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம்; ரூ.4000கோடியில் சீரமைக்க முடிவு: 66 ஆண்டுகளுக்கு பிறகு அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல்

தமிழ்நாடு பகுதிகளில் பெய்யும் மழை நீரானது மேற்கு நோக்கி கேரளாவிற்குள் சென்று அரபிக் கடலில் கலந்து இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் வீணானது. இதையடுத்து அப்போதைய முதல்வர் காமராஜர் மற்றும் கேரள முதல்வர் நம்பூதிரி பாட் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால் பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏபி) திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் உருவாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களும், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.

இதுதவிர இரு மாநிலங்களின் குடிநீர்த் திட்டங்களும், நீர்மின் திட்டங்களும் பிஏபி திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு, கேரளா ஒத்துழைப்போடு இந்த திட்டம் 1962ல் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு ஏறக்குறைய 66 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், பிஏபி திட்டத்தில் மறு சீரமைப்பு செய்து தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் மேலும் செம்மைப்படுத்த தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

பிஏபி திட்டத்தின் கீழ் உள்ள சோலையார், பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி அணை உள்ளிட்ட 9 பெரிய அணைகள், 4 மின் நிலையங்கள், 6 முக்கிய சுரங்கங்கள் மற்றும் ஏராளமான பாசன கால்வாய்கள், கிளை கால்வாய்கள், துணை கால்வாய்கள் உள்ளன.  தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் திருட்டு, வாய்க்கால்கள் உடைப்பு, தண்ணீர் பகிர்வில் குளறுபடி என பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. எனவே, தற்போதைய சூழலுக்கு ஏற்ப பிஏபி பாசன திட்டத்தை சீரமைக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நீர்வளத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்ட அறிக்கையில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், பாசன பகுதியில் 2 இடங்களில் சோதனை அடிப்படையில் நுண்ணீர் பாசனம் செயல்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பரம்பிக்குளம் ஆழியாறு சீரமைப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் கடந்த வாரம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் பெரியபோது, திருமூர்த்தி அணை மேல்கால்வாய் ஆகிய பகுதிகளில் சோதனை அடிப்படையில் நுண்ணீர் பாசனம் செயல்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி ஒன்றிய அரசின் நிதி பெற்று தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* பிஏபி திட்டத்தின் கீழ் உள்ள அணைகள்
பிஏபி திட்டத்தின் கீழ் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. இதே போல சர்க்கார்பதி, ஆழியார், சோலையார், காடம்பாறை, திருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நீர்மின் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* ‘அவிநாசி-அத்திக்கடவு திட்டம் போல பிஏபி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் கூறுகையில், ‘பிஏபி திட்டத்தின் கீழ் பாசனம் பெறும் பெரும்பாலான விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை. கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்வதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. நுண்ணீர் பாசன முறையை அமல்படுத்துவதுதான் சிறந்த நடவடிக்கை.

குறிப்பாக அவிநாசி-அத்திக்கடவு திட்டம் போல பிஏபி திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். பிஏபி தண்ணீர் தற்போது 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் 6 மாதங்கள் வீதம் 1 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. இதன்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தண்ணீர் கிடைக்கின்றது.

பிஏபி திட்டத்தை முழுமையாக சீரமைப்பு செய்து பாசன பகுதி முழுவதும் நுண்ணீர் பாசன திட்டம் அமல்படுத்தினால் அனைத்து விவசாயிகளுக்கும் தடையின்றி விநியோகிக்க முடியும். மின்சார நுகர்வு, தண்ணீர் திருட்டு தடுப்பு, மனித ஆற்றல் விரயம் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பாசன பகுதிகளில் நுண்ணீர் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தி விட்டனர்.

இதுதான் எதிர்காலத்திற்கு ஏற்ற திட்டம். தற்போது அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரையில் 2 இடங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை பிஏபி பாசன பகுதி முழுவதும் நுண்ணீர் பாசன திட்டத்தை அமல்படுத்தவேண்டும். தொலைநோக்கு திட்டம் என்பதால் அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்றார்.

The post நுண்ணீர் பாசன முறை செயல்படுத்த நீர்வளத்துறை பரிந்துரை: பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம்; ரூ.4000கோடியில் சீரமைக்க முடிவு: 66 ஆண்டுகளுக்கு பிறகு அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: