டைசனுக்கும் யூடியுப் சமூக வலைதளத்தில் 2 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை பெற்றுள்ள பிரபல குத்துச் சண்டை வீரர் ஜேக் பாலுக்கும் (27) இடையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் ஏடி அண்ட் டி ஸ்டேடியத்தில் நேற்று ஹெவிவெயிட் போட்டி நடந்தது. இப்போட்டியை, 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டு வந்து ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். போட்டியின் முதல் ரவுண்டில் மட்டும் துடிப்புடன் செயல்பட்ட மைக் டைசனால், பின் வந்த ரவுண்டுகளில் வேகமாக குத்துக்களை விட முடியவில்லை. வயது முதிர்வடைந்த டைசனை பக்கத்தில் நெருங்க விடமால் சற்று தொலைவிலேயே இருத்தி சோர்வடையச் செய்தார் ஜேக் பால். அதேசமயம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் டைசன் மீது குத்துக்கள் விட்டு நிலை தடுமாறவும் செய்தார். இந்த புதிய உத்தி, டைசனை மிகவும் சோர்வடையச் செய்தது. 3வது ரவுண்டில் ஜேக் பால் தொடர்ச்சியாக இடியென இறக்கிய ஆக்ரோஷ குத்துக்கள், டைசனை நிலைகுலையச் செய்தன.
இருப்பினும், 8 ரவுண்டுகளிலும் நாக்அவுட் ஆகாமல் நிமிர்ந்து நின்று கெத்து காட்டினார் டைசன். போட்டியின் மூன்று நடுவர்களும், முறையே 80-72, 79-73, 79-73 புள்ளிகள் அளித்து ஜேக் பால் வென்றதாக அறிவித்தனர். இதன் மூலம் ஜேக் பால் ஹெவிவெயிட் போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. அவர், ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி உள்ளார். அதேசமயம், டைசனின் தோல்வி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ‘இந்த போட்டியில் டைசனின் கைக்கெட்டும் துாரத்தில் செல்வதை ஜேக் பால் தவிர்த்தார். நெருங்கி வந்திருந்தால் ஒரே குத்தில் டைசனால் நாக்அவுட் செய்திருக்க முடியும். வயது முதிர்வால்தான் டைசன் தோற்றார்’ என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஹெவிவெயிட் போட்டியில் வென்ற ஜேக் பாலுக்கு பரிசுத் தொகையாக 340 கோடி ரூபாயும், தோற்ற மைக் டைசனுக்கு, 170 கோடி ரூபாயும் கிடைக்கும்.
மோதிய ரவுண்டு எட்டு; டைசன் காட்டிய கெத்து.! தலை வணங்கி பாராட்டிய ஜேக் பால்
நேற்று முன்தினம் எடை பார்க்கும் நிகழ்ச்சியின்போது, ஜேக் பால் செய்த சேட்டைகளால் எரிச்சலுற்ற மைக் டைசன், கன்னத்தில் பளார் விட்டது, குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. பளார் வாங்கிய ஜேக் பால், ‘டைசன் சாக வேண்டும். போட்டியின்போது அதை நிறைவேற்றிக் காட்டுவேன்’ என கர்ஜித்து இருந்தார். இருப்பினும், நேற்றைய போட்டியில், 8 ரவுண்டுக்கு பின்னும் டைசனை ஜேக் பாலால் நாக்அவுட் செய்ய முடியவில்லை. 8வது ரவுண்டு முடிவுக்கு பின்னும் கெத்தாக நின்ற மைக் டைசனை பார்த்து பிரமித்துப் போன ஜேக் பால், அவருக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்தியதை கண்ட ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
‘நான் நினைத்ததை போன்றே டைசன் மகத்தான வீரர்தான். அவரது சாதனை வரலாற்றில் என்றும் நீடித்திருக்கும்’ என, ஜேக் பால் புகழாரம் சூட்டினார். டைசனிடம் பேசிய நிருபர் ஒருவர், ‘மீண்டும் குத்துச் சண்டை போட்டியில் உங்களை பார்க்க முடியுமா?’ எனக் கேட்டார். அதற்கு, ‘அப்படி நினைக்கவில்லை. இருப்பினும், ஜேக் பாலின் சகோதரர் லோகன் பாலுடன் மோதலாம்’ என டைசன் பதில் அளித்தார். அப்போது, ரிங்குக்கு வெளியே நின்றிருந்த லோகன் பால், ‘உன்னை கொன்று விடுவேன்’ என சத்தமிட்டது, சலசலப்பை ஏற்படுத்தியது.
The post டைசனை வென்றார் ஜேக் பால்: வயது முதிர்வால் தோற்றதாக ரசிகர்கள் வேதனை appeared first on Dinakaran.