12 மாதங்களில் 2 ஐசிசி தொடரில் சாம்பியன்; கவுதம் கம்பீரிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?: முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டி

கொல்கத்தா: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி: டி.20உலக கோப்பை பைனலில் ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே நியூசிலாந்து போட்டியை இழந்துவிட்டது. என்னுடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடமும் நான் அதையே சொன்னேன். இந்தியா போன்ற அசுரத்தனமான பேட்டிங் யூனிட்டை கொண்டிருக்கும் ஒரு அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது தவறு. அரை மணி நேரத்தில் இந்தியா உலகக் கோப்பையை வென்று விட்டது.

மேலும் அதற்கடுத்து உங்களுக்கு பந்துவீச்சில் பும்ரா வந்து விடுகிறார். இவர்களை நீங்கள் வெல்வது மிகவும் கடினம். தற்போது இந்தியாவுக்கு விளையாடாதவர்களை நீங்கள் பார்த்தாலே இந்தியா எவ்வளவு வலிமையானது என்று உங்களுக்கு தெரியும். மேலும் 14 வயதான வைபவ் சூர்யவன்சி வரையில் மிகச் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவால் எளிதாக 2 தரமான அணிகளை உருவாக்க முடியும். ஒயிட் பால் கிரிக்கெட்டில் கம்பீர் சிறந்த பயிற்சியாளராக உள்ளார். அவருக்கு மிகச் சிறந்த அணி உள்ளது. 12 மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஒரு பயிற்சியாளராக நீங்கள் இதைவிட வேறு என்ன காட்ட விரும்புகிறீர்கள்?.

அடுத்த ஆண்டு தென்ஆப்ரிக்காவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் அவருக்கு சவால் இருக்கும், அங்கு பந்து நகரும். ஆனால் அவர் சவாலை எதிர்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் டிரஸ்ஸிங் ரூமைப் புரிந்துகொள்கிறார். அவர் தனிநபர்கள் மீது ஆர்வம் காட்டுவதில்லை. அவர் எப்போதும் அணியின் நலன்களை முதலில் வைத்திருப்பார். அவர் கரடுமுரடானவராகத் தோன்றலாம், ஆனால் நான் அவரை நன்கு அறிவேன், அவர் ஒரு நல்ல மனிதர். ஒயிட்பால் கிரிக்கெட்டில் இந்தியாவுடன் போட்டியிடக்கூடிய 2அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மட்டுமே. தென்ஆப்ரிக்காவிடம் திறமை இருக்கிறது. மற்ற பெரும்பாலான அணிகள் இந்த இந்திய அணிக்கு எதிராக வெற்றிபெற வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: