அடுத்தடுத்து பண்டிகை அணிவகுப்பதால் நெல்லை – தாம்பரம் எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இயக்கப்படுமா?

நெல்லை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம், தென்காசி வழியாக ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட நெல்லை – தாம்பரம் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தநிலையில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகள் தொடர்ந்து அணிவகுப்பதால் வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தீபாவளி முடிந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்வதற்கு நெல்லையிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலின் முன்பதிவு சில நிமிடங்களில் முடிவடைந்தது. இந்த ரயிலுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது. ரயில்வேக்கும் நல்ல வருமானத்தை கொடுத்தது.

நெல்லை ரயில் நிலையத்தில் 3 நாட்கள் காலியாக காத்து கிடக்கும் நெல்லை – புருலியா ரயிலின் பெட்டிகளை கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து, பின்னர் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவதற்கு இந்த ரயில் வசதியாக இருக்கும் என்பதால் இதனைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்வதற்கு நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், கொல்லம் மெயில் சிலம்பு, இரு வந்தே பாரத் ரயில்கள் என அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பி வழிகின்றன.

தட்கல், பிரிமியம் தட்கல் என எந்த வகையிலும் டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே தீபாவளியை முன்னிட்டு நெல்லையில் இருந்து அம்பை பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட நெல்லை – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும். இதனால் தென் மாவட்ட பயணிகளுக்கு வசதியாக இருப்பதோடு தெற்கு ரயில்வேக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். மேலும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகை தினங்கள் வர இருப்பதால் ரயில் பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம் தென்காசி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post அடுத்தடுத்து பண்டிகை அணிவகுப்பதால் நெல்லை – தாம்பரம் எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இயக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: