வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 16.11.2024 மற்றும் 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நான்கு நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 01.01.2025-ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, 2025-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இச்சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 வெளியிடப்பட்டது.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வருகின்ற 16.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் (Polling Station Location) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம் நாட்களையும் படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8 வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (01.01.2007-ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம்-7ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம்-8ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28.11.2024 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் //voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

The post வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் appeared first on Dinakaran.

Related Stories: