தனி பட்ஜெட் போடும் அளவுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜிகேஎம். காலனி ஜம்புலிங்கம் பிரதான சாலை 12வது தெருவில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று காலை ஆய்வு செய்தனர். இதையடுத்து கொளத்தூரில் உள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்தனர். இதன்பிறகு நிருபர்களிடம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது; அனைத்து மாணவ செல்வங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பிலும் என் சார்பிலும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

77 வகைகளில் பள்ளிகளில் ஆய்வுசெய்யும் பொருட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஆய்வு 234வது தொகுதியாக முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் நிறைவடைந்துள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ஐந்தாண்டுகளில் 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 2467 கோடி ரூபாய் பள்ளி வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர் முயற்சியால், உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் எத்தனை கட்டிடங்கள் பள்ளிகளுக்காக கட்டப்பட்டுள்ளன.

நாங்கள் மட்டுமே பள்ளிக் கல்வித்துறைக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக் கல்வித் துறைக்கு தனியாக பட்ஜெட் போடும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி, அரசு பள்ளியாக இருந்தாலும் சரி 10 குழந்தைகள் வெளியே செல்லும்போது ஆசிரியர்களும் உடன் செல்லவேண்டும். பெற்றோர்களின் ஒப்புதல் பெற்று செல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடுதான் செல்ல வேண்டும் என நாங்கள் கூறியுள்ளோம். மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். அவர்களது ரகசியங்கள் காக்கப்படும். பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்து அவர்கள் அதை மூடிமறைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post தனி பட்ஜெட் போடும் அளவுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: