கையில் ‘டேக்’ முதல் ‘மெட்டல் டிடெக்டர்’ வரை : மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்களை அடுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (14.11.2024) காலை, மருத்துவர் பாலாஜி அவர்களை, சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் காணொளி வாயிலாக மருத்துவக்கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நேற்று காலை நடைபெற்ற அசம்பாவித சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சைக்குப்பிறகு தற்போது நலமுடன் உள்ளார். இன்று காலை அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். பாதிக்கப்பட்ட மருத்துவர் எழுந்து உட்கார்ந்து சரளமாக பேசிக் கொண்டிருந்தார். மருத்துவர் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவரும் மிக நன்றாக அறிவார். அவருடைய மகளும் ஒரு மருத்துவர், அவரும் உடனிருந்து கண்காணித்து வருகிறார். மருத்துவர் பாலாஜியின் மனைவி மற்றும் தாயார் நேற்று காலையிலிருந்து மருத்துவமனையில் உடனிருந்து அவரை கண்காணித்து வருகிறார்கள். ஏற்கெனவே அவருக்கு இருதயத்தில் Pace Maker கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த Pace Maker கம்பெனி இதுகுறித்து ஆய்வு செய்து மிகச் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்து விட்டு சென்றிருக்கிறார்கள். இன்று மீண்டும் ஒருமுறை அந்த Pace Maker செயல்பாடுகள் மறு ஆய்வு செய்வதற்கு அந்த கம்பெனி வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவருக்கு பொறுத்தப்பட்டிருக்கும் Pace Maker குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள், அதனைத் தொடர்ந்து இன்று மதியம் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் மருத்துவர் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்படவிருக்கிறார். மருத்துவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கட்டணப்படுக்கைகளுடன் கூடிய தனி அறைக்கு ஒரு சில பரிசோதனைகளுக்கு பிறகு மாற்றப்படவிருக்கிறார்.

குற்றவாளி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு:-
அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்னும் இளைஞரை அம்மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், காவல்துறையில் ஒப்படைத்தனர் என்பதை அனைவரும் அறிவர். அவர் மீது காவல்துறையினர் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

· 126/2 அத்துமீறி நுழைதல்,
· 115/2 காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு செயல்படுதல்,
· 118/1 ஆபத்தான காயங்களால் ஆபத்தை ஏற்படுத்துதல்,
· 121/2 பணியில் இருக்கும் பொது ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல்,
· 109 கொலை முயற்சியில் ஈடுபடுதல்,
· 351/3 உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்தி மிரட்டுதல்

2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் மருத்துவ சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது வன்முறையினையும், சொத்து சேதத்தினையும் அல்லது இழப்பினையும் ஏற்படுத்துவதை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு 48/2008 கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக முக்கியமான பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 15 நாட்களுக்கு நீதிமன்றம் அவருக்கு கடுங்காவல் தண்டனை தந்திருக்கிறார்கள். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துதல்

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலோடு, ஏற்கெனவே மேற்குவங்கம் மாநிலங்களில் நடைபெற்ற மருத்துவர்கள் மீதான சம்பவங்கள் ஒட்டி, தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளுக்கு புதிய சீர்திருத்தங்கள் செய்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, தலைமைச் செயலாளர் கடந்த ஆகஸ்ட் திங்கள் 19ஆம் தேதி உயரலுவலர்களுடனான கூட்டம் நடத்தி மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்தார்கள். எடுக்கப்பட்ட முடிவுகளை எல்லாம் செயல்படுத்துவதற்கு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை அலுவலர்களுக்கு தகுந்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை உங்கள் முன்னாள் சொல்கின்றேன், அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் காவல் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து பாதுகாப்பு குறித்து கூட்டுத் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதனுடைய காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைகளில் தேவையான வெளிச்சம் மற்றும் விளக்குகள் உள்ளனவா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு, பயோமெட்ரிக் முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையம் மற்றும் காவல் ரோந்துப் பணிகள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் காவல் உதவி என்னும் செயலியை அவர்களது கைப்பேசியில் பதிந்து கொள்ள செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் இன்றைக்கு பல்வேறு மாற்றங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளர்களுடன் வருகின்ற பார்வையாளர்களுக்கு அடையாள அட்டைகள் தரும் பணியினை செய்வோம் என்கின்ற வகையில் உறுதி மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் பரிட்சார்ந்த ரீதியாக கடந்த அக்டோபர் திங்கள் 8 ஆம் தேதி முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 நிறங்களைக் கொண்ட கையில் கட்டிக்கொள்ளும் வகையில் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது.
·
பச்சை நிறம் கொண்ட அடையாள அட்டை Surgical Super Speciality மருத்துவச்சேவை பெறும் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
· சிவப்பு நிறம் கொண்ட அடையாள அட்டை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
· மஞ்சள் நிறம் கொண்ட அடையாள அட்டை Super Speciality என்கின்ற வகையில் அந்த நோயாளர்களுடன் வருகின்ற பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
· நீலம் நிறம் கொண்ட அடையாள அட்டை பொது மருத்துவத்திற்கு வருகின்ற நோயாளர்களின் பார்வையாளர்களுக்கு கட்டப்படும் அடையாள அட்டை ஆகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இம்மருத்துவமனையில் இதுவரை 7000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 4 வண்ணங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் பணி நடைபெற்றுள்ளது. வெளிப்புற நோயாளர்களுக்கு (out patient) அடையாள அட்டை வழங்கப்படும் பணியினையும் அன்று தொடங்கி வைத்திருக்கிறோம். அதுவும் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறை படிப்படியாக 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், 320 வட்டார அரசு மருத்துவமனைகளிலும், அடையாள அட்டை நோயாளர்களின் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுவது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட இணை இயக்குநர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் அலுவலர்களுடன் இதுகுறித்து பேசப்பட்டிருக்கிறது.

மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை:-

மேலும் நேற்று 11 அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளடக்கியிருக்கும் சங்கங்களுடான கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக்கூட்டத்தில் நானும், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் இத்துறையின் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் 4 மணிக்கு சந்திக்க வேண்டும் என்று வந்திருந்தார்கள் அவர்களுடன் கலந்து பேசப்பட்டது. நடைபெற்ற சம்பவம் குறித்து பெரிய அளவிலான வருத்தம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அந்தவகையில் அவர்களும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு திருப்தி தெரிவித்தார்கள். அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி தமிழ்நாடு முழுவதும் மருத்துவச் சேவை பாதிக்கப்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அரசுடன் இணைந்து மருத்துவர்களும் மருத்துவ கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுகிறார்கள், மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்களாக யாரும் இல்லை.
சுமூக தீர்வு காணப்பட்டதற்கு நன்றி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இன்று காலை முதல் நான் தொலைபேசியில் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் கவன ஈர்ப்பாக நடந்த நிகழ்வினை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் அடையாளமாக ஒருசில நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதே தவிர மருத்துவ சேவை பாதிப்புகள் எங்கும் இல்லை. இதற்காக அனைத்து அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் துறையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

நலம் விசாரித்தல்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவர் பாலாஜி அவர்களை நேற்று மாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மரு.பாலாஜி அவர்களும் ஏற்கனவே மருத்துவமனையில் நான் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறேன். என் தந்தைக்கும் இந்த மருத்துவமனை உயிர் காப்பாற்றி நடக்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது, எனக்கு மேலும் இருக்கும் 5 ஆண்டுகள் பணிக் காலத்தில் கலைஞர் மருத்துவமனையிலேயே மிகச்சிறப்பான சேவையினை செய்யும் வாய்ப்பாக இருக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களும் நலமுடன் உள்ளார். இத்தகைய பாதிப்பினை ஏற்படுத்திய நபரை தீவிரமாக தண்டிக்கும் நடவடிக்கையினை காவல்துறை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு கருவிகள்:-

அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனும் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து நான் பேசவுள்ளேன். பின்னர் அனைத்து மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகளுடனான கூட்டமும் நடத்தப்படவுள்ளது. மருத்துவர்களின் கோரிக்கைகளுள் ஒன்றான Metal detector அனைத்து மருத்துவமனைகளிலும் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கு ஒரு சில இடங்களில் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது, மிகவிரைவில் எந்த மருத்துவமனை என்று அறிவிக்கப்படும். தற்போதைய காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சேவை பெற வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2021 க்கு முன்னர் 6500 பேர் புறநோயாளிகளின் எண்ணிக்கை இருந்தது என்பது தற்போது 12,000 நபர்களாக உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2021க்கு முன்னர் 3000 பேர் வந்திருந்தனர்,

தற்போது 4500 பேர் புறநோயாளிகளாக வருகின்றனர். தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நிலையே உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள்ளாகவே புறநோயாளிகள் சேவை முடிக்க வேண்டும். எனவே இதுபோன்ற இடங்களில் Metal detector அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஒரு சில இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு:

தமிழ்நாட்டை பொறுத்தவரை நோய் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு முன்னாள் தனியார் மருத்துவ சேவையினை பயன்படுத்தி வந்தவர்கள் தற்போது அரசு மருத்துவ சேவையின் மீது நம்பிக்கை கொண்டு விரும்பி பயன்படுத்த தொடங்கியுள்ளதால்தான் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகளின் சேவை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே கட்டண படுக்கை வசதிகள் இருந்தது. ஆனால் தற்போது 15 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் நடுத்தரவர்க மக்களும் பயன்படுத்தும் வகையில் தனியரை வசதியுடன் கட்டண படுக்கை தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 17.11.2024 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கவுள்ளேன். ஏற்கனவே சேலம், கோவை, மதுரை போன்ற இடங்களில் தொடங்கி வைத்துள்ளேன். இதுபோன்று அரசு மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தி வருவதால் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.

The post கையில் ‘டேக்’ முதல் ‘மெட்டல் டிடெக்டர்’ வரை : மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்களை அடுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! appeared first on Dinakaran.

Related Stories: