கடலூர் அருகே சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தாசில்தார், துணை தாசில்தார் உட்பட 3 பேருக்கு சிறை

கடலூர்: கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒட்டிமேடு பவழங்குடியைச் சேர்ந்தவர் மாபூஷா இவர் என்எல்சி நிறுவனத்தின் கேண்டினில் வேலை செய்யும் போது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் இவரது மனைவி கமூர்நிஷா அரசாங்கத்தால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, உதவித்தொகை, மற்றும் கல்வி உதவி தொகை ஆகியவற்றை பெறுவதற்காக சாதி சான்றிதழ் மற்றும் வருமானம் வரி சான்றிதழ் பெறுவதற்காக இ சேவை மூலம் விண்ணப்பித்துள்ளார்.

பின்னர் திருமுட்டம் தாசில்தாரான கண்ணன் மற்றும் துணை தாசில்தாரான அருள்பிரகாசம் ஆகியோரிடம் சான்று வழங்க கேட்ட போது இருவரும் தனித்தனியாக ரூ.7 ஆயிரம் என மொத்தம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இது குறித்து கமூர்நிஷா கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.

கமூர் நிஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமுட்டம் தாசில்தாரான கண்ணன், துணை தாசில்தாரான அருள்பிரகாசம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 29.08.2019-ந் தேதி திருமுட்டம் தாசில்தார் அலுவலகத்தில் கண்ணன், அருள்பிரகாசம் மற்றும் லஞ்ச பணம் வாங்க உடந்தையாக இருந்த உத்திரவன்னியன் ஆகியோர் லஞ்சப்பணம் ரூ.14 ஆயிரம் பெற்ற போது கைது செய்தனர்.

பின்னர் இது சம்பந்தமாக கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி நாகராஜன் தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பில், தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் அருள் பிரகாசம் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இரண்டு பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5000 அபராதமும் அபராத பணத்தை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும், லஞ்ச பணம் வாங்க உடந்தையாக இருந்த உத்திரவன்னியன் என்பவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 3 மாதம் காலம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.

The post கடலூர் அருகே சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தாசில்தார், துணை தாசில்தார் உட்பட 3 பேருக்கு சிறை appeared first on Dinakaran.

Related Stories: