கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலை திருட்டு: புதுக்கடை அருகே பரபரப்பு

புதுக்கடை: புதுக்கடை அருகே நள்ளிரவு கோவில் மதில் சுவர் ஏறி குதித்து ஐம்பொன் சிலை, அங்கியை திருடி சென்ற கும்பல் அருகில் உள்ள கோவிலிலும் கைவரிசை காட்டில் உள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் மிக பழமை வாய்ந்த பார்த்தசாரதி கோவில் உள்ளது. தற்போது இந்த கோவில் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை என்று 2 வேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கோவிலில் இரவு காவலர்கள் என்று யாரும் இல்லை. ஆகவே தினசரி பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் கோவிலின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் கோவில் பூட்டை உடைத்து மிகவும் பழமையான 5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, வெள்ளியிலான 2 அங்கிகள் ஆகியவற்றை திருடிச் சென்று உள்ளனர். இதற்கிடையே இன்று அதிகாலையில் கோவிலை திறக்க பூசாரி வந்துள்ளார். அப்போது கோவிலுக்குள் இரவு யாரோ புகுந்து திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனே புதுக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பிரதான கோவிலில் உள்ள 2 கதவுகளையும் உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று இருப்பது தெரியவந்தது. பின்னர் கருவறையில் உள்ள ஐம்பொன் சிலை மற்றும் வெள்ளி அங்கிகள் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடி உள்ளனர். திருட்டு நடந்த இடத்தில் ஒரு முகக் கண்ணாடி சிக்கி உள்ளது. அதை கைப்பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதுக்கடை அருகே மங்காடு பகுதியில் உள்ள பாலதண்டாயுத பாணி கோவிலிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ள தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் அந்த கோவிலில் உள்ள 20 கிலோ எடை கொண்ட உத்சவ மூர்த்தி சிலை திருடப்பட்டு உள்ளது. இந்த 2 கோவில்களிலும் ஒரே கும்பல் தான் கைவரிசை காட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கும்பல் மிகப் பெரிய அளவில் திருட்டு நடத்தும் கும்பலாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது. காரணம் பார்த்த சாரதி கோவில் ஐம்பொன் சிலை மிக பழமையான சிலை ஆகும். அதன் மதிப்பு பல லட்சங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே கோயிலில் ஐம்பொன் சிலை இருக்கிறது என்பதை முன்பே அந்த கும்பல் நோட்டமிட்டு இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 கோவில்களிலும் கைவரிசை காட்டிய கும்பல் குறித்து தீவிரமகா விசாரித்து வருகின்றனர்.

The post கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலை திருட்டு: புதுக்கடை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: