அடுக்குமாடி கட்டுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு வணிக கட்டிடங்களுக்கு கூடுதல் எஸ்.எப்.ஐ. வழங்க அரசு அனுமதி: விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது

சென்னை: தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுமான திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி தொழில், வணிகவளாக பயன்பாட்டு கட்டிடங்களுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான அரசாணையை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதில், அடுக்குமாடி குடியிருப்புகள் போல அடுக்குமாடி தொழில் கட்டிடங்களை அனுமதிக்க, பொது கட்டிட விதிகளில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உற்பத்தி, ஒன்று சேர்த்தல், இருப்பு வைத்தல் போன்ற தலைப்புகளில் தொழில் நிறுவனங்களின் தேவை அடிப்படையில் விதிகளில் வகைப்படுத்பப்பட்டுள்ளன. வணிக கட்டிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் மனை பரப்பளவில் எத்தனை மடங்கு என்ற அடிப்படையில் எப்.எஸ்.ஐ. எனப்படும் தளப்பரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. அதில் இப்போது தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படும் வகையில், குளோபல் எப்.எஸ்.ஐ. என்ற தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தொழிற்சாலை கட்டுவதற்கு மனை அடிப்படையில் மட்டும் பார்க்காமல், அத்திட்டத்தின் மொத்த பரப்பளவு அடிப்படையில் கட்டிடங்களுக்கான கணக்கிடும் முறை அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து கட்டுமான துறையில் உள்ள டி.வி.ஆர். மோகன் கூறுகையில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்த தேர்வு செய்யப்படும் மனையின் மொத்த பரப்பளவில், எத்தனை மடங்கு பரப்பளவுக்கு கட்டிடம் கட்டலாம் என்பதை குறிப்பதே எப்.எஸ்.ஐ. எனப்படும் தளப்பரப்பு குறியீடாகும். உதாரணமாக 3 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் கட்டும்போது 6 ஆயிரம் சதுர அடி அளவுக்கு கட்டிடம் கட்ட அனுமதிக்கலாம் என்பதே இதன் அர்த்தமாகும். இதற்கு மாநகராட்சியில் அனுமதி பெற முடியும். அதற்கு மேல் கட்டிடம் கட்டுவதாக இருந்தால் சி.எம்.டி.ஏ.வில் 10 சதவீதம் கட்டணம் செலுத்தி பிரிமீயம் எப்.எஸ்.ஐ.க்கு அனுமதி வாங்க வேண்டும். சாதாரண பொதுமக்கள் ஒரு கிரவுண்ட் இடத்தில் வீடு கட்டும்போது, சுற்றிலும் 5 அடி இடம் விட வேண்டும். எத்தனை வீடு கட்டுகிறோமோ அதற்கேற்ப கார் பார்க்கிங் இடம் விட வேண்டும். மற்றபடி 2 கட்டிடங்களுக்கு ரோடு அகலத்தை பொறுத்து அனுமதி கிடைக்கும் என்றார்.

தமிழக அரசின் சிப்காட், சிட்கோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தனியார் நிறுவனங்கள் – தொழில் பூங்காக்களை அமைப்பது கட்டுமான விதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தபட்ச பரப்பளவு 100 ஏக்கர் இருக்க வேண்டும். பச்சை, ஆரஞ்சு, சிவப்பு வகை தொழில்களை சேர்ந்த கட்டிடங்கள் கட்டும்போது அது அமையும் இடத்தில் குறைந்தபட்ச சாலையின் அகலம் 30 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கு 1.5 மடங்கு என இருந்த தளப்பரப்பு குறியீடு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனம் சார்ந்த குடியிருப்புகள், தங்குமிடங்கள், விடுதிகளை கட்டுவதற்கு தளப்பரப்பு குறியீடு பக்கவாட்டு காலி இடவிதிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி தொழில் கூடங்களுக்கு அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் தளப்பரப்பு குறியீடு 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post அடுக்குமாடி கட்டுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு வணிக கட்டிடங்களுக்கு கூடுதல் எஸ்.எப்.ஐ. வழங்க அரசு அனுமதி: விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: