மாமல்லபுரம் பவழக்காரன் சத்திரத்தில் அரசு புறம்போக்கு இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி

* அதிமுக கவுன்சிலரின் கணவர் அட்டூழியம், கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, பவழக்காரன் சத்திரத்தில் அரசு தரிசு புறம்போக்கு இடத்தில் இருந்த குட்டையை ஏரி மண் கொட்டி மூடி, பிளாட் போட்டு விற்பனை செய்ய முயலும் அதிமுக கவுன்சிலரின் கணவர் மீது, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் பேரூராட்சி 12வது வார்டுக்குட்பட்ட பவழக்காரன் சத்திரம் பகுதியில் 130க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள, நிழற்குடைக்கு பின்புறம் சுமார் 50 சென்ட் பரப்பளவு கொண்ட தரிசு புறம்போக்கு இடத்தில் குட்டை ஒன்று அமைந்துள்ளது.

இந்த, குட்டை பேரூராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த, குட்டையின் ஒரு பகுதி சுமார் 20 ஆண்டுக்கும் மேலாக சுடுகாடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 12வது வார்டு அதிமுக கவுன்சிலராக பவழக்காரன் சத்திரம் பகுதியை சேர்ந்த சரிதா என்பவர் உள்ளார். இவர், சம்பந்தப்பட்ட பகுதியில் சாலை அமைப்பது, குளம் தூர்வாரும் பணி மேற்கொள்ளுவது, கால்வாய் மற்றும் கல்வெட்டு, குடிநீர் தொட்டிகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தாமே எடுத்து செய்வதற்கு, அதிமுகவில் இருந்து திடீரென விலகி, ஒரு சில மாதங்களிலேயே திமுகவில் இணைந்தார். பின்னர், மீண்டும் அதிமுகவிலேயே சேர்ந்து விட்டார்.

இந்நிலையில், இவரது கணவர் கோவிந்தராஜ் யாரிடமும் அனுமதி வாங்காமல் அத்துமீறி அங்குள்ள தரிசு புறம்போக்கில் இருந்த குட்டையில் ஏரி மண் கொட்டி முழுமையாக மூடிவிட்டார் என கூறப்படுகிறது. மேலும், அவர் என்ன காரணங்களுக்காக குட்டையை மூடினார் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அதே இடத்தில், புதிய ரேஷன் கடையும் கட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த தரிசு புறம்போக்கு இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டும் காணாதது போல் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அப்பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால், அதிமுக கவுன்சிலர் சரிதா கணவர் கோவிந்தராஜ் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு குட்டையை மீட்டு, பிளாட் போட்டு விற்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு பிடியில் உள்ள மற்ற புறம்போக்கு இடத்தையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பொதுமக்களை ஒன்று திரட்டி ஓஎம்ஆர் சாலையை மறித்து மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என சமூக ஆர்வலர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வரும் பகுதியாக உள்ளது. தற்போது, நகராட்சியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் வீட்டு மனைகளை வாங்கி குவித்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சிலர் மனை அமைக்கும் இடத்தின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களையும் சேர்த்து மனைகளாக போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இத்தகைய, செயல்களால் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.

இதை அங்குள்ள வருவாய் துறையும், மாவட்ட அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சரிதா என்பவர் உள்ளார். இவரது, கணவர் கோவிந்தராஜ் அரசு தரிசு புறம்போக்கு இடத்தில் இருந்த குட்டையை மண்கொட்டி மூடி, ஒரு பகுதியில் ரேஷன் கடை கட்டி விட்டார். அந்த, இடத்திற்கு பட்டா வாங்கவும், பிளாட் போட்டு விற்பனை செய்ய அதிகாரிகள் துணையோடு பல்வேறு முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. இதே நிலை, நீடித்தால் வருங்காலத்தில் மனைப் பட்டா வேண்டும் என்றால் அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கொட்டினால் கிடைக்கும் என்ற நிலை உருவாகி விடும்’ என்றனர்.

The post மாமல்லபுரம் பவழக்காரன் சத்திரத்தில் அரசு புறம்போக்கு இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: