மதுரை: மதுரையில் நாடகமேடை அருகே பெயிண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, முத்துப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(50). இவருக்கு கடந்த 25 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரே மாதத்தில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் பால்பாண்டி பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவர் தனியாக இருந்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் பால்பாண்டி தங்கியிருக்கும் விட்டின் உரிமையாளர், பால்பாண்டியின் அண்ணன் கணேசனுக்கு நேற்று போன் செய்துள்ளார். அப்போது, பால்பாண்டி முத்துப்பட்டி நாடக மேடை அருகில் மயங்கி கிடப்பதாக கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது, பால்பாண்டி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பால்பாண்டி உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பால்பாண்டியின் மர்மச்சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post மதுரையில் பெயிண்டர் மர்மச்சாவு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.