தஞ்சாவூர், மார்ச் 29: தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக கருதி, டாஸ்மாக் ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டதால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 140 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் போது, அந்த பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் சில நேரங்களில் அதற்கான கருவிகளில் ஸ்கேன் செய்தும், கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்கேன் செய்யாமலும் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒரு நபருக்கு 6 புல் மது பாட்டிலும், 12 ஆப் பாட்டிலும், 24 குவாட்டர் பாட்டில்களும் விற்பனை செய்யலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில் தஞ்சை டாஸ்மாக் நிர்வாகம் ஒரே பில்லில் 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்துள்ளது, நிர்வாகத்தின் கணினி கணக்கீட்டின்படி தெரிய வந்துள்ளது எனக் கூறி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு கடந்த 24ம் தேதி முதல் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் குறிப்பட்டப்பட்ட கடைகளின் எண்ணில் எந்த நேரத்தில் எவ்வளவு பாட்டில் ஸ்கேன் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த கடிதத்தை பார்த்த டாஸ்மாக் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் ஒரே நபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் மது பாட்டில்களை நாங்கள் விற்பனை செய்வதில்லை. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டம் அதிகமாக இருக்கும்.
அப்போது ஒவ்வொரு மதுபாட்டிலையும் ஸ்கேன் செய்யாமல் விற்பனை செய்து, பின்னர் அந்த பெட்டியில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்து கொள்கிறோம். இதனால் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மது பாட்டில்கள் விற்பனை செய்தது போன்று தெரிகிறது. இந்த கணக்கீடை வைத்துக் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களிடம் பல்வேறு நிர்பந்தங்களை தொடங்கியுள்ளது. இதுகுறித்து உரிய விளக்கத்தை நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
