அரசியல் களத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வாக்கு சதவீதங்களை உயர்த்தும்

 

புதுக்கோட்டை, மார்ச் 29: தேர்தல் களத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அரசு சார்ந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, முறையான விமர்சனங்களை செய்ய, ஆட்சியாளர்கள் மக்களுக்கு செய்யத் தவறியவைகளை எடுத்துக்காட்ட உதவியாக உள்ளதாக அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செயற்கை நுண்ணறிவு தள பயன்பாடு காரணமாக கட்சிகளுக்கு 4 முதல் 5 சதவீத வாக்குகள் வரை சேரும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு முழுமையாக 35 நாட்களே உள்ள நிலையில் அரசியல்கட்சியினர் மக்கள் மத்தியில் பிரசாரத்தை துவங்க உள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலை காட்டிலும் இனி வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல் மாறுபட்டவை. அதற்கான காரணம், கடந்த ஆண்டுகளில் சமூக ஊடங்களில் அரசியல் கட்சிகள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் அனைத்து விஷயங்களையும் கொண்டுசேர்த்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இதை அனைத்து கட்சிகளும் இப்போது உணர்ந்து நேரில் மக்களை சென்று சந்தித்து மேற்கொள்ளும் பிரச்சாரங்களுடன் சேர்த்து, தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களை தொடர்புகொள்ள தொடங்கிவிட்டனர். இன்றைய காலத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அனைத்தையும் எளிதாக்கி உள்ளது என்றே கூறலாம்.

இந்த செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் செய்த சாதனைகளை கார்டூன்கள், வீடியோக்கல், போட்டோக்களை வடிவமைத்து தங்கள் பிரத்யேக சமூக வளைதள பக்கத்தில் பதிவிடுகின்றனர். இது குறித்து திமுக தொழில்நுட்ப பிரிவினர் கூறுகையில், அனைத்து துறைகளிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்துள்ளது. அதற்கு அரசியலும் விதிவிலக்கல்ல. குறிப்பாக திமுக போன்ற பழம்பெரும் மக்கள் செல்வாக்கு உள்ள கழகத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்க செயற்கை நுண்ணறிவு தளம் பயனுள்ளதாக உள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், குறிப்பாக மக்கள் தேவையை பூர்த்தி செய்த திட்டங்கள், மகத்தான திட்டங்கள், முந்தைய ஆட்சியாளர்கள் செய்யத்தவறியவை போன்றவை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி படித்தவர், பாமரமக்கள், குழந்தைகள் வரை அனைவருக்கும் சென்றடையும் நோக்கில் கார்டூன்களாக, வீடியோவாக, போட்டோக்களாக வடிவமைக்கப்பட்டு சமூக வளைதள பக்கத்தில் பதிவிடப்படுகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னணி நிறுவன செயற்கை நுண்ணறிவு தளங்களில் அரசியல் சார்ந்து தனிநபர் விமர்சனங்கள் செய்வது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு மக்களுக்கு செய்த சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 2026 திமுக தேர்தல் வாக்குறுதி பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மக்கள் தங்கள் மாவட்ட தொகுதி சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகளை அதில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி ஒலிதரவுகள் வாயிலாக அல்லது எழுத்து வாயிலாக வெளியிடலாம். இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய தள பயன்பாடு காரணமாக சுமார் 4 முதல் 5 சதவீத வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என தரவுகள் தெரிகின்றன. அரசியல் களத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு சிறந்த தேர்தல் முடிவுகளை தரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

 

Related Stories: