அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டும் பணி

 

அரியலூர்,மார்ச் 29: அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார். அரியலூரில் ரூ.101.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அரியலூர் புறவழிச்சாலையில் (அம்மாகுளம் பிரிவு சாலை அருகே) ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மும்மினேனி சுதீர்குமார், ஏ.டி.மரியா கிளீட் மற்றும் அரியலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி மலர்வலண்டினா ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட மூத்த வழக்குரைஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நினைவு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து, நீதிபதி மும்மினேனி சுதீர்குமார் பேசும்போது, அரியலூர் மாவட்டம் ஒரு வரலாறு சிறப்பு மிக்க மாவட்டம். இங்கு பல்வேறு புதை உயிரி பொருள்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. திருமழபாடி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நாளில் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட பூமிபூஜை செய்யப்பட்டுள்ளது. இது அரியலூர் மாவட்ட வழக்குரைஞர்களின் 20 ஆண்டு கால கனவு.

இது இன்று நினைவாகியுள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றி. நீதிபதிகள், வழக்குரைஞர்கள், வழக்காடிகள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய கட்டட வசதி என்பது முக்கியமாகும். அது தற்போது நிறைவேறி உள்ளது. வழக்குரைஞர்கள் இதனை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நீதி கிடைக்க சிறப்பாக பணியாற்றி வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி மற்றும் நீதிபதி கள், மற்றும் வழக்குரைஞர்கள் இராம.மனோகரன்,ராஜா, சின்னதம்பி, விஜி, பரமேஸ்வரன், முத்துக்குமார், கமலக்கண்ணன் செல்ல.சுகுமார், ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: