அன்று கொரோனா… இன்று உலக நாடுகள் போர்… ஆட்டம் கண்ட ரூ.6,500 கோடி கரூர் ஜவுளி வர்த்தகம்: ஆண்டுக்கு ரூ.1000 கோடி எட்டுவதே மூச்சு தள்ளுது

கரூர் என்றாலே ஜவுளி, கொசுவலை மற்றும் பஸ்பாடி கட்டுமானம் போன்ற முக்கிய தொழில்களின் சிறப்பிடமாக விளங்கி வருகிறது. கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலைகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் கொசுவலைகள் அதிகளவில் கரூரில் தான் தயாரிக்கப்படுகிறது. பஸ்பாடி கட்டுமானத்தை பொருத்தவரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து அதிகளவு பஸ்பாடி கட்டுமானம் கரூரில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கரூர் மாநகரம் மூன்று முக்கிய தொழில்களை கொண்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.

தினமும் இந்த தொழில்களை மையப்படுத்தி கரூர் மாநகரத்துக்கு மட்டும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கைத்தறிக்கு பெயர் பெற்ற நகரமாக இருந்து பின்னர் மெல்ல, மெல்ல மாறி வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற நகரமாக கரூர் விளங்கி வருகிறது. கடந்த 1970ம் ஆண்டு துவங்கிய கரூர் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி சிறுக, சிறுக வளர்ந்து கரூர் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட நேரடி வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி ஏற்றுமதியாளர்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக சீனா, ஜெர்மனி, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் வீட்டு உபயோக பொருட்களான கையுறை, ஏப்ரான், கிச்சன் டவல், கர்ட்டன் (திரைச்சீலைகள்), தலையணை உறைகள் போன்ற பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திருப்பூருக்கு அடுத்து அந்நிய செலாவணியை ஈட்டும் நகரமாக கரூர் மாநகரம் உள்ளது. இந்திய அளவில் ஏற்றுமதி நகரங்களில் ஒன்றாக கரூர் பெயர் பெற்று விளங்குகிறது.

இந்த தொழில் மூலம் கரூர் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களான நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என நேரடி மற்றும் மறைமுகமாக 1 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். கரூர் நகரில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் ஆயத்த ஆடை (கார்மெண்ட்) தொழிலிலும் கால் பதித்துள்ளது. கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கரூர் நகரின் வளர்ச்சியுடன் பின்னி பிணைந்துள்ளது.

கரூர் மற்றும் அதனை சுற்றிலும் 400க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6,500 கோடி வருவாய் ஈட்டி வந்தது. இந்நிலையில், ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போர் தாக்கம் ஐரோப்பா நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் காரணமாக கரூர் ஜவுளி உற்பத்தி அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கரூரில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உற்பத்தி மூலம் ஆண்டுக்கு குறைந்தது ரூ.6,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டு வந்தது. தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போர் மற்றும் பல்வேறு பாதிப்புகள் காரணமாக ஐரோப்பியர்களிடையே வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தி தொழிலும் லேசான பாதிப்பை சந்தித்துள்ளது. போரின் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்த வேண்டும் என அவர்கள் நினைப்பதால் பிற செலவுகளை குறைத்து தேவையான செலவுகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த ஓராண்டாக கரூர் ஜவுளி உற்பத்தியில் ஆண்டுக்கு ரூ.2000 கோடி அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா பகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டு சகஜ நிலை திரும்பும் போது, ஜவுளி உற்பத்தி தொழிலும் ஏற்றம் பெறும். அதற்கான சூழலை நாங்கள் எதிர்பார்த்து உள்ளோம். இதனால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. திருப்பூருக்கு அடுத்தபடியாக கரூரில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள், ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றவை.

ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் கொரோனா கால பாதிப்பில் ஐரோப்பிய நாடுகள் கரூருக்கு வழங்கிய ஆர்டர்கள் அனைத்தையும் எடுக்க முடியாமல் தவித்தனர். கரூரில் தயாரிக்கப்பட்ட அனைத்து ஜவுளி ரகங்களும் தேங்கின. 500க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள், ஜவுளியை உற்பத்தி செய்து, அனுப்ப முடியாமல் பெருத்த நஷ்டத்தை சந்தித்தனர். அன்று முதல் கரூர் ஜவுளி உற்பத்தியில் அடிக்கடி அடி விழுந்து வருகிறது. ஆனாலும் செய்த தொழிலை விடாமல் நகர்த்தி வருகின்றனர் என்பதே நிதர்சனம். தற்போதைய நிலையில் ஆண்டுக்கு ரூ.1000 கோடி என்பதே மூச்சு தள்ளுது,’’ என்றார்.

* வேலையில்லாமல் வீடு திரும்பும் தையல் தொழிலாளர்கள்
கரூர் ஜவுளி உற்பத்தியை நம்பி சிறு, சிறு நிறுவனங்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தன. ஆனால், கொரோனா காலம் மற்றும் தற்போது போர் காலம் என விழும் அடிகளால் 100க்கு 60 சதவீதம் சிறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றிய தொழிலாளர்கள் 80 சதவீதம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். நிறைய பேர் கரூர் பஸ் நிலையத்தில் குவிவார்கள். அனைவருக்கும் அப்போதெல்லாம் வேலை கிடைக்கும். ஆனால், தற்போது கரூரில் நின்று கொண்டே இருந்து வேலையே இல்லாமல் ஜவுளி தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் வீடு திரும்புகின்றனர்.

* மீண்டும் உச்சம் தொடுமா?
ஜவுளி உற்பத்தியை அதிகப்படுத்தவும், கரூர் மாநகரம் வளர்ச்சி காணவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜவுளி பூங்கா உள்பட பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆனாலும் ரஷ்யா- உக்ரைன் போரால் எல்லா நடவடிக்கைகளும் நீரு பூத்த நெருப்பாக போய் கொண்டிருக்கிறது. போர் முடிந்தால் அல்லது போர் நடவடிக்கைகள் குறைந்தால் மட்டுமே மீண்டும் கரூர் மாநகரில் ஜவுளி உற்பத்தி உச்சத்தை தொடும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* சனிக்கிழமைலாம் அப்போ திருவிழா மாதிரி இருந்துச்சு….
டேபிள் கிளாத், ஜன்னல் ரிங், ஆப்ரான், கட்டன்ஸ் என புதிய, புதிய ரகங்களில் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு கரூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்டர் பெறுவார்கள். ஆர்டர் பெறப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் தயார் செய்து, குறிப்பிட்ட தேதியில் கப்பல் மற்றும் ஏரோபிளேனில் அனுப்பி வைப்பார்கள்.

இதற்காக குட்டி, குட்டி தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர் தரப்பட்டு விடிய, விடிய ஜவுளி உற்பத்தி நடக்கும். ஆண், பெண் பாகுபாடின்றி தயாரிப்பு பணி மேற்கொள்வார்கள். வாரந்தோறும் சனிக்கிழமை பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. அப்போதெல்லாம் கரூர் மாநகரமே விழாக்கோலம் பெறும். பணம் புரளும், ஆனால், தற்போது தினமும் 5 ஆயிரம் பேர் குவிந்த கரூர் மாநகரத்தில், குறைந்தபட்ச தொழிலாளர்களே சென்று வருகின்றனர்.

The post அன்று கொரோனா… இன்று உலக நாடுகள் போர்… ஆட்டம் கண்ட ரூ.6,500 கோடி கரூர் ஜவுளி வர்த்தகம்: ஆண்டுக்கு ரூ.1000 கோடி எட்டுவதே மூச்சு தள்ளுது appeared first on Dinakaran.

Related Stories: