21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், லட்சத்தீவு பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும், நிலை கொண்டுள்ளன. அவை வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த 15ம் தேதி முதல் வட தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இதுதவிர பெரம்பலூர் மாவட்டத்திலும் நேற்று மழை பெய்தது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளன.

இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாற வாய்ப்புள்ளது. அது பின்னர் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் போது தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 20ம் தேதியில் திருப் பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 21ம் தேதி மேற்கண்ட இடங்களுடன் விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

24ம் தேதியில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடல் பகுதியில் 20 மற்றும் 21ம் தேதியில் அந்தமான் கடல் பகுதி, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும், 22ம்தேதி அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post 21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது appeared first on Dinakaran.

Related Stories: