வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை அளித்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 1985 டிசம்பரில் குடியுரிமைச் சட்டத்தில் பிரிவு 6ஏ சேர்க்கப்பட்டது. இதன்படி 25 மார்ச் 1971க்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து அசாமில் நுழைந்து குடியேறியவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற குடியுரிமைச் சட்டத்தில் பிரிவு 6ஏ வழிவகை செய்யப்பட்டது. இருப்பினும், பிரிவு 6ஏ கடந்த 1966ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் வங்கதேசத்தில் இருந்து அசாமிற்குள் நுழைந்த அனைத்து குடியேறியவர்களுக்கும் குடியுரிமை வழங்கியது. மேலும், கடந்த 1966ம் ஜனவரி 1ம் தேதி மற்றும் 24 மார்ச் 1971க்கு இடையில் அசாமில் நுழைந்து குடியேறியவர்கள் பத்து ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் சலுகைகள் இல்லாமல் இந்திய குடிமக்களாகக் கருதப்பட்டனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பரிதிவாலா, எம்.எம்.சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், “கடந்த 1971ம் ஆண்டு மார்ச் 25க்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்துக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கும் பிரிவு 6ஏ சரியானது. அந்த கட்ஆப் தேதியை வரையறுத்தது சரியான ஒன்றாகும். இந்த விவகாரத்தில் பிரிவு 6ஏ என்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று கருத முடியாது. புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் குடிமக்கள் ஆனவுடன் அவர்கள் இந்திய அரசியலமைப்பின் மூலம் ஆளப்பட்டனர். எனவே அவர்கள் நம் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர்களாக ஆகின்றனர் என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்” என்று தீர்ப்பளித்தனர். நீதிபதி ஜே.பி.பரிதிவாலா மட்டும் இந்த தீர்ப்போடு ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் நான்கு நீதிபதிகள் பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளதால், கடந்த 1971ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியது மற்றும் 6ஏ பிரிவு செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

The post வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை அளித்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: