மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை வேண்டும்: எடப்பாடி, ராமதாஸ், ஜி.கே.வாசன், பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: மழை பாதிப்புகளில் இருந்து, சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி, ராமதாஸ், ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட காலங்களில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும், மாவட்ட அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல், களத்தில் நேரடியாக இறங்கி மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பொதுமக்கள் குடிநீர், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களை காக்கும் பணியில் கடமை உணர்வோடு தமிழக அரசு ஈடுபட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்: சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ள இருக்கிறது. பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தாழ்வானப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றக்கூடிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். மூடப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: வடகிழக்கு பருவமழை துவங்கும் இந்த நேரத்தில் மின்சார பிரச்னைகள் உருவாகும். தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு வயர்மேன், கள உதவியாளர், கேங்மேன் ஆகிய மூவர்களின் மீது கூடுதல் பணி சுமை விழுகிறது.

குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்த வடகிழக்கு பருவ மழையை சரி செய்து சமாளித்து விடலாம் என அரசு எண்ணாமல், கேங்மேன்களாக பணிபுரியக் கூடிய தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவித்து, ஏற்கனவே தேர்ச்சி பெற்ற 5000 கேங்மேன்களையும் பணியில் அமர்த்தி, ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியக் கூடிய தொழிலாளர்களை நிரந்தரம் செய்து, உடனடியாக பொதுமக்கள் மின்தடையால் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். மின் ஊழியர்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் குறைந்தது 3 செட் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாத வண்ணம் சுமுகமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்.

The post மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை வேண்டும்: எடப்பாடி, ராமதாஸ், ஜி.கே.வாசன், பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories:

சென்னை: பெண் கல்வி ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒற்றை பெண் பிள்ளையாக இருப்பவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெயரில் ஆராய்ச்சி குறிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.37 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இத்திட்டத்தில் யூஜிசி ஆல் பல மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாத நிலையில் ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் பயனாளிகளாக இணைக்கப்பட்ட 1029 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறாமல் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிச்சயமற்ற தன்மை கல்வி முன்னேற்றத்தை பாதித்து உயர்கல்வியில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் குறைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். பெண் பிள்ளைகளை பாதுகாத்து, கல்வி வழங்குவோம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மட்டும் இருக்க கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை விடுவிப்பதோடு புதிய விண்ணப்பங்களை பெற யு.ஜி.சிக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலியுறுத்தியுள்ளார்.