உள் இடஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் எஸ்சி இடது பிரிவு, ராகுலிடம் கோரிக்கை வைக்க முடிவு

பெங்களூரு: நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் வரும் உட்பிரிவில் உள்ள சாதிகளை சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூகநீதி ஆகியவற்றில் மேலோங்க வேண்டும் என்றால், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கி இருக்கும் இடஒதுக்கிடு சலுகையில், உள்பிரிவினருக்கு தனியாக உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்வராக மறைந்த கருணாநிதி இருந்தபோது, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் வரும் அருந்ததியர் வகுப்பினருக்கு தனியாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டுவந்தார்.

அதை தொடர்ந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலத்திலும் தனி இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டங்களை ரத்து செய்யகோரி சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனு தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் வழங்கிய தீர்ப்பில், எஸ்சி பிரிவில் வரும் துணை சாதியினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தேசியளவில் ஆதரவும், எதிர்ப்பு கருத்துகளும் எழுந்துள்ளது.

இதனிடையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்ததுடன் காங்கிரஸ் மேலிடத்திடம் ஆலோசனை பெறப்படும் என்றும் தெரிவித்தார். இதனிடையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்துவது குறித்து சாதக-பாதகம் குறித்து ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலம் கடத்தாமல் செயல்படுத்தினால் மட்டுமே துணை சாதியினர் பயனடைய முடியும் என்பது தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ள இடது பிரிவு தலைவர்களில் நோக்கமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு மக்களவை தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக கர்நாடகாவில் உள்ள தலைவர்களை காட்டிலும் ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமான தலைவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்திலை தொடர்பு கொண்டு ராகுல்காந்தியை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும், அவர் தரப்பில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது.

அதை தொடர்ந்து முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் சிந்தேவின் மகளும் சோலாப்பூர் எம்பியுமான பிரணதி சிந்தே மூலம் ராகுல்காந்தியை சந்திப்பதற்கான முயற்சி தொடங்கியுள்ளனர். இதனிடையில் உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் விஷயத்தில் மவுனமாக இருக்கும் முதல்வர் சித்தராமையா, கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

The post உள் இடஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் எஸ்சி இடது பிரிவு, ராகுலிடம் கோரிக்கை வைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: