மாநில காங்கிரஸ் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு: எம்பி விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி புகார்

உத்தரகன்னடா: மாநில காங்கிரஸ் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்று எம்பி விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி பரபரப்பு புகார் கூறியுள்ளார். உத்தரகன்னடா மாவட்டம், ஷிரசி தாலுகாவில் உள்ள எம்பி அலுவலகத்தில், பாஜ மக்களவை உறுப்பினர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. கடந்த 2022ம் ஆண்டு ஹூப்பள்ளியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் காவல் நிலையத்துக்கு தீ வைத்து கொளுத்தியது இன்றும் நினைவில் உள்ளது.

ஆனால் மாநில அரசு ஹூப்பள்ளி கலவர வழக்கில் 150 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற்று குற்றவாளிகளை பாதுகாக்க செய்தி அனுப்பியுள்ளது. இதன் காரணமாக ஜனநாயகத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கை இழக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை காக்க காங்கிரஸ் அரசு செய்த குற்றம் இது. மேலும், காவல் நிலையத்தை தாக்கிய கும்பல் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்கை வாபஸ் பெற்று, குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு என்ற செய்தியை மாநில காங்கிரஸ் அரசு அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சிறுபான்மையினரான முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் சமூகத்தின் பிரதான நீரோட்டத்துக்கு வருவதை தடுப்பதற்காக திருப்திப்படுத்தும் அரசியல் செய்கின்றனர். காங்கிரசுக்கு இந்துக்கள் பற்றி பேசும்போது ஜாதி முக்கியம். முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தில் பல சாதிகள் உள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் அங்கு நடத்தவில்லை? காங்கிரஸ் சதியால் சிறுபான்மையினர் பலியாகிவிடக்கூடாது.

காங்கிரஸ் ஒரு பிரிட்டிஷ் மனநிலையை உருவாக்கியுள்ளது, மாநிலத்தில் ஒரு அரசாங்கம் உள்ளது, ஆனால் ஆட்சி இல்லை. அரசியல் வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் மூழ்கி கிடக்கிறது. சித்தராமையா தனது பிடிவாதமான மற்றும் திமிர்த்தனமான நடத்தையால் மாநில மக்களை அவமதித்து வருகிறார். சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ளட்டும். கனமழையால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. மாநில வளர்ச்சிக்கு பணம் இல்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை’ என்றார்.

The post மாநில காங்கிரஸ் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு: எம்பி விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி புகார் appeared first on Dinakaran.

Related Stories: