அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது 20 தொகுதிகளில் இவிஎம்களை மாற்றி தில்லுமுல்லு நடந்ததா? கூடுதல் புகார்களை அளித்தது காங்கிரஸ்

புதுடெல்லி: அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது 20 தொகுதிகளில் ஏராளமான மின்னணு வாக்கு இயந்திரங்களை மாற்றி தேர்தல் முடிவில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கூடுதல் புகார்கள் தரப்பட்டுள்ளன. அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பாஜ 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தல் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது பல முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்களை கொண்ட குழு கடந்த 9ம் தேதி தேர்தல் ஆணையத்தில் 7 புகார்களை கொடுத்தது. அதில், ‘அரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பல வாக்கு இயந்திரங்களில் 99 சதவீத பேட்டரி சார்ஜ் இருப்பதை எங்கள் கட்சி வேட்பாளர்கள் கவனித்துள்ளனர். நாள் முழுவதும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் இவிஎம் இயந்திரங்கள் பின்னர் சீலிடப்பட்டு பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின் அந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் நாளில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு ஆன் செய்யப்படும்.

நாள் முழுவதும் வாக்குப்பதிவு நடந்த இயந்திரங்களில் பொதுவாக 60 அல்லது 70 சதவீத பேட்டரி மட்டுமே சார்ஜில் இருக்கும். 99% பேட்டரி சார்ஜ் இருப்பது சாத்தியமற்றது’ என கூறியிருந்தனர். எனவே, வாக்குப்பதிவு நாளில் கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் மாற்றப்பட்டு தில்லுமுல்லு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், மேலும் 13 தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர்கள் தற்போது தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அதிலும், வாக்கு இயந்திரங்கள் 99 சதவீத சார்ஜூடன் இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மொத்தம் 20 தொகுதிகளின் இவிஎம் முரண்பாடு குறித்து புகாரளிக்கப்பட்டிருப்பதாகவும், இதை தேர்தல் ஆணையம் விரைவில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும் என நம்புவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் கடந்த சில நாட்களாக அரியானா மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வருகிறேன். எங்கள் கட்சி நிர்வாகிகளிடம், பூத் வாரியான அறிக்கையை கேட்டுள்ளோம். இதன் மூலம் மேலும் எங்கெங்கெல்லாம் மோசடி நடந்திருக்கிறது என்பதை அறிய முடியும். தீர ஆலோசனை நடத்தியபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்’’ என்றார்.

* அதிக சார்ஜ் இருந்தால் பாஜவுக்கு அதிக வாக்கு
அரியானா தேர்தலில் பல காங்கிரஸ் வேட்பாளர்கள் மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக புகாரளித்தவர்களில் ஒருவரான அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் கூறுகையில், ‘‘பல இயந்திரங்கள் 80 முதல் 90 சதவீத சார்ஜூடன் இருந்தன. எனவே இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நாளில் மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும், அதிக சார்ஜ் உள்ள இயந்திரங்களில் பாஜவுக்கு அதிக எண்ணிக்கையிலான வாக்கு கிடைத்துள்ளது. மேலும் 70க்கும் குறைவான சார்ஜ் இருந்த இயந்திரங்களில் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இது எங்கள் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

* 20 தொகுதிகள் எவை?
அரியானாவின் நர்னால், கர்னால், டப்வாலி, ரேவரி, ஹோடல் (எஸ்சி), கல்கா, பானிபட் நகரம், இந்திரி, பட்கல், பரிதாபாத் என்ஐடி, நல்வா, ரானியா, பட்டோடி (எஸ்சி), பல்வால், பல்லப்கார், பர்வாலா, உச்சனா கலன், கராவுண்டா, கோஸ்லி மற்றும் பாட்ஷாபூர் ஆகிய 20 தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

* மபியிலும் முறைகேடு?
காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி திக்விஜய் சிங் கூறுகையில், ‘‘அரியானாவில் தபால் வாக்கு எண்ணிய போது, 90 இடங்களில் 76ல் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. இவிஎம் வாக்கு எண்ணத் தொடங்கியதும் நிலைமை மாறியது. இதே போல கடந்த ஆண்டு நவம்பரில் மத்தியபிரதேசத்தில் நடந்த தேர்தலிலும் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் 230ல் 199 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. இவிஎம் இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியதும் பாஜ முன்னிலை பெற்றது. எனவே மபியிலும் இவிஎம் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ என்றார்.

The post அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது 20 தொகுதிகளில் இவிஎம்களை மாற்றி தில்லுமுல்லு நடந்ததா? கூடுதல் புகார்களை அளித்தது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: