ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்புமனு தாக்கல் தொடக்கம்: நவம்பர் 13ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் நவம்பர் 13ம் தேதி முதல் கட்டமாக நிகழும் தேர்தலுக்கு 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து அக்.25 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே தேர்தல் அதிகாரியின் அறைக்குள் செல்ல வேண்டும். பொது வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்சி/எஸ்டி வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரமும் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம்.முதல் முறை வாக்காளர்கள் 11.84 லட்சம் பேர் உள்பட மொத்தம் சுமார் 2.60 கோடி வாக்காளர்கள். அதில் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என 13 லட்சம் பேர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் 2.23 கோடியாக இருந்தது..வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப் பெற அக்டோபர் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.

கோடர்மா, பர்கதா, பர்கி, பர்ககான், ஹசாரிபாக், பஹரகோரா, ஜாம்ஷெட்பூர் கிழக்கு, ஜாம்ஷெட்பூர் மேற்கு, இச்சாகர், ராஞ்சி, ஹதியா, பாங்கி, டால்டோங்கஞ்ச், பிஷ்ராம்பூர், ஹுசைனாபாத், கர்வா மற்றும் பவநாத்பூர் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி பொதுப் பிரிவின் கீழ் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், எஸ்டி தொகுதிகளான காட்சிலா, பொட்கா, செரைகெல்லா, சாய்பாசா, மஜ்கான், ஜகநாத்பூர், மனோகர்பூர், சக்ரதர்பூர், கர்சவான், தமர், டோர்பா, குந்தி, மந்தர், சிசாய், கும்லா, பிஷுன்பூர், சிம்தேகா, கோலேபிரா, லோஹர்டகா மற்றும் மனிகா ஆகிய தொகுதிகளுக்கும், எஸ்சி தொகுதிகளான சிமாரியா, சத்ரா, ஜுக்சலை, கான்கே, லதேஹர் மற்றும் சத்தர்பூர் ஆகிய தொகுதிகளுக்கும் அன்றைய தினம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்புமனு தாக்கல் தொடக்கம்: நவம்பர் 13ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: