நகராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: தண்ணீர் குளம் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு கொடுத்துள்ளார். திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர் குளம் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா தயாளன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

அதன் விவரம் வருமாறு, தண்ணீர் குளம் ஊராட்சியில் உள்ள பெரும்பாலானோர் தினக்கூலிக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயத்தை நம்பியும் ஏராளமான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் மிகவும் நலிவடைந்தோர், பழங்குடியினர் மற்றும் இருளர் இன வகுப்பை சேர்ந்த 159 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் வகையில் ஒன்றிய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் மற்றும் குடிசை வீடுகள், ஓடு வீடுகள் உள்ள குடும்பங்களுக்கு கலைஞரின் கனவு இல்ல வீடுகள் ஆகியவை நகராட்சியுடன் இணைக்கும் போது கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலை உள்ளது.

எனவே தண்ணீர்குளம் ஊராட்சியை நகராட்சியில் இணைத்திட ஏதுவாக இல்லாத காரணத்தினால் திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா தயாளன் தெரிவித்துள்ளார்.

The post நகராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: