சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

குளித்தலை: ஆசிரியையின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி சொகுசு கார் வாங்கி மோசடி செய்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை கலப்பு காலனியை சேர்ந்தவர் டோமினிக் பிரபாகரன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சங்கீதா(44). ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை. டோமினிக் பிரபாகரன் கடந்த ஆண்டு திருச்சி திருவெறும்பூரில் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆசிரியை சங்கீதா குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், எங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை விற்று தருவதாக கூறி குளித்தலை சட்டமன்றத் தொகுதி தவெக உறுப்பினர் சேர்க்கை குழு நிர்வாகி ராஜா(40) அறிமுகமானார்.

கார் வாங்க நினைத்த என்னிடம் ராஜா கடந்த ஏப்ரல் மாதம் ஒருவரை அழைத்து வந்து சொகுசு காரின் பெயரை சொல்லி ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார். அதன்பின் கார் வாங்கும் முடிவை கைவிட்டுவிட்டேன். ஆனால் மோசடியாக எனது ஆவணங்களை பயன்படுத்தி ராஜா கார் வாங்கியிருப்பது, தவணை தொகை கேட்டு வந்தபோது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். இது தொடர்பாக குளித்தலை போலீசார், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து ராஜாவை கடந்த 3ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை சிறையில் அடைத்தனர்.

 

The post சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: