இந்நிலையில், நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியில் தனியார் நிறுவன தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு நிலம், வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில், திருவனந்தபுரத்திலுள்ள மண்டல கேன்சர் மைய மருத்துவமனை முகவரியுடன் கூடிய மருத்துவக் கழிவுகள், ஊசிகள், உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வீட்டுக்கழிவு பொருட்கள் உள்ளிட்டவைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நெல்லை மாவட்ட வருவாய் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். புகாரின்படி சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கழிவுகளை கொட்டியது தொடர்பாக சுத்தமல்லியைச் சேர்ந்த மாயாண்டி (42), மனோகர் (51) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளரான மாயாண்டி கேரளாவிற்கு நெல்லையில் இருந்து கனிம வளங்கள் உள்ளிட்டவற்றை லாரி மூலம் அனுப்பியதும், வெற்று லாரியுடன் திரும்பி வருவதை தவிர்க்க அங்குள்ள நிறுவனங்களிடம் பேசி லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு இடைத்தரகராக மாறி 6 மாதங்களுக்கு மேலாக நெல்லையில் பல்வேறு இடங்களில் கேரள மருத்துவ கழிவுகளைக் கொட்டியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
* மழையால் சிக்கினார்
மாயாண்டி சுட்டிக்காட்டிய இடத்தில் லாரி டிரைவர்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். அவர்கள் குப்பைகளை கொட்டிய பிறகு எரித்துவிட்டுச் சென்றுவிடுவார்களாம். இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லையில் கன மழை பெய்ததால், நெல்லை, சுத்தமல்லி அருகே புத்தேரியில் மருத்துவ கழிவுகளை அப்படியே போட்டுவிட்டு லாரி டிரைவர்கள் சென்றுள்ளனர். இதையடுத்து கழிவுகள் கொட்டப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதனால்தான் இடைத்தரகரான மாயாண்டி வசமாக சிக்கியுள்ளார்.
The post கேரள மருத்துவ கழிவுகளை கொட்டிய வழக்கு நெல்லை லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் அதிரடி கைது: இடைத்தரகராக செயல்பட்டது அம்பலம் appeared first on Dinakaran.