நெட்டப்பாக்கம் தனியார் தொழிற்சாலையில் சுவரை உடைத்து 250 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய வாலிபர் அதிரடி கைது

*மேலும் 2 பேருக்கு வலை

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தனியார் தொழிற்சாலையில் சுவரை உடைத்து உள்ளே புகுந்து 250 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். நெட்டப்பாக்கத்தில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு தொழிற்சாலையில் 3 மர்ம நபர்கள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டு இருந்த 250 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்று விட்டனர். காப்பர் ஷோரூமின் பின்பக்க சுவரை உடைத்து இந்த துணிகர செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் இது தெரியவந்தது. திருட்டு போன காப்பர் பொருட்களின் மதிப்பு ₹1.5 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்த்தி, நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், எஸ்ஐ வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் ஏரிப்பாக்கம் புதிய காலனி பகுதியை சத்தியமூர்த்தி (24), புஷ்பராஜ், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் ஆகிய 3 பேரும் சேர்ந்து இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில், சத்தியமூர்த்தியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து காப்பர் கம்பிகளை கைப்பற்றினர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post நெட்டப்பாக்கம் தனியார் தொழிற்சாலையில் சுவரை உடைத்து 250 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: